தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலம் என்றால் அது  கர்நாடகாதான். இங்கு எதிர்வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று, 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.


பாஜக vs காங்கிரஸ்


தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்னரே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களது கட்சியினரை தயார்படுத்தும் பணியினை தொடங்கிவிட்டனர். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொங்கு சட்டமன்றம் அமைந்ததால், யாராலும் தனித்து ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.


இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி ஏற்றனர். முதலமைச்சராக குமார்டசாமி பொறுப்பேற்றார். ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு ஆண்டு முடிந்த பின்னர் மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு தாவியதால், அங்கு பாஜக ஆட்சிக்கு வந்தது. 


முந்திக்கொண்ட காங்கிரஸ்


ஒரு மாநிலத்தில் பொதுத் தேர்தல் வருகிறது என்றால், பாஜக தான் வேட்பாளர்களை முதலில் அறிவித்து தேர்தல் களத்தினை எதிர்கொள்ளும். ஆனால் இம்முறை காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் யார் என்பதை அறிவித்து விட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. 


இது காங்கிரஸ் கட்சியின் அரசியல் யுக்தியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மூன்று மாநிங்களில் ஆட்சி செய்யும் காங்கிரஸ், கர்நாடகாவை கைப்பற்ற இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தனது கூட்டணியில் இணையும் மற்ற கட்சிகளுக்கு மீதமுள்ள 100 இடங்களில் சிலவற்றை வழங்கலாம் என கூறப்படுகிறது.


இது மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் விரித்துள்ள வலையாக பார்க்கப்படுகிறது. ஆனால், அக்கட்சியின் தலைவர் குமாரசாமி காங்கிரஸ் கட்சிக்கு பிடி கொடுக்காமல், மம்தாவை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. 


பாஜக யுக்தி


இம்முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை பிரதமர் மோடி 7 முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் மக்களை திரட்டி மற்ற கட்சிகளுக்கு இன்னும் மோடி அலை இருக்கிறது என்பதை உணர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.


குறிப்பாக பாஜக அரசு தற்போது  இஸ்லாமியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. இது, லிங்காயத் சமூகத்தினரின் வாக்குகளை பாஜகவினருக்கு முழுமையாக பெற்றுத்தருவதற்கான பாஜகவின் நகர்வாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது பாஜகவின் சரியான நகர்வா இல்லையா என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும். 


தேர்தல் அறிவிப்புகள்


இரு கட்சிகளும் தங்களால் முடிந்த அளவுக்கு தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளனர். ஆனால், வாக்குறுதிகள் மட்டும் தேர்தல் முடிவுகளை நிர்ணடம் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக தேர்தல் களம் குறித்து ஏபிபி நடத்திய கருத்து கணிப்பு இன்று மாலை 5.15 மணிக்கு வெளியாகவுள்ளது. இது குறித்த செய்திகள் ஏபிபி நாடு யூடூப் தளத்திலும் வெளியிடப்படவுள்ளது.