Lok Sabha Election 2024: கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தனது தோள் மீது கைபோட்டதற்காக தொண்டர் ஒருவரை அடித்துள்ளார்.
தொண்டரை அறைந்த டி.கே. சிவக்குமார்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதில் கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கர்நாடகா துணை முதலமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவக்குமார் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை அன்று ஹாவேரியில் உள்ள சவனூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவரை சிவக்குமார் அறைந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொண்டரை அடித்தது ஏன்?
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வினோதா அசூட்டிக்கு ஆதரவாக, வாக்கு சேகரிப்பதற்காக சிவக்குமார் ஹாவேரி வந்திருந்தார். அவரை வரவேற்கும் விதமாக சாலையின் இரண்டுபுறமும், ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்திருந்து, டிகே டிகே என முழக்கமிட்டனர். அப்போது தனது காரில் இருந்து இறங்கி சில அடிகள் நடந்து சென்றபோது, கூட்டத்தில் இருந்த மஞ்சள் சட்டை அணிந்திருந்த நபர் சிவக்குமாரின் தோளின் மீது கையை போட்டு,எதிரில் இருந்த நபரிடம் புகைப்படம் எடுக்குமாறு சைகை காட்டினர். இதனை சற்றும் எதிர்பாராத சிவக்குமார் எரிச்சலடைந்து, தொண்டரை அறைந்து விலகி செல்லுமாறு எச்சரித்தார். இதனால் அந்த நபர் அதிர்ச்சியடைய, அடனே அங்கு இருந்த காவலர்கள் மற்றும் தொண்டர்கள் அடிவாங்கிய நபரை அங்கிருந்து கூட்டத்திற்குள் தள்ளிவிட்டனர். டி.கே. சிவக்குமரால் தாக்கப்பட்ட அலாவுதீன் மணியார் என்பவர், சாவனூர் பேரூராட்சி உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது. கட்சி தலைவரால் தாக்கப்பட்ட பிறகும் கூட அவர் மீண்டும், பேரணியில் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
கர்நாடகா தேர்தல்:
28 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 14 இடங்களுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மீதமுள்ள 14 இடங்களுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2019 ஆம் ஆண்டில், பாஜக 28 இடங்களில் 25 இடங்களை வென்றது. அதே நேரத்தில் மாநிலத்தில் கூட்டணி அமைத்து இருந்த காங்கிரஸ் மற்றும் ஜேடி-எஸ், தலா ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றின. இந்த முறை, பாஜக மற்றும் ஜேடி-எஸ் கட்சிகள் கூட்டாக தேர்தலை சந்திக்கின்றன. தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகளால், ஜே.டி.எஸ். கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. ரேவாண்ணாவின் தந்தை போலீசாரால் விசாரணை காவலில் எடுக்கப்பட்டுள்ளார். இதனிடையே, ரேவண்ணா தொடர்பான வீடியோக்களை பகிரங்கமாக பரப்புவதற்கு, டி.கே. சிவக்குமார் தான் சதித்திட்டம் தீட்டியதாக, ரேவண்ணாவின் மாமாவும், கர்நாடகா முன்னாள் முதலமைச்சருமான எச்.டி.குமாரசாமி, குற்றம் சாட்டியுள்ளார்.