கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பல தொகுதிகளில் முன்னிலைப் பெற்ற நிலையில், அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


கர்நாடகாவில் கடந்த ஒரு மாதமாகவே களைக்கட்டிய தேர்தல் திருவிழா முடிவுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடி தொடங்கி உள்ளூர் பிரமுகர்கள் வரை மாநில மக்களிடையே சட்டமன்ற தேர்தலுக்காக வாக்குகளை சேகரித்த நிலையில் கடந்த மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். சுமார்  73.19 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் அங்கு ஆட்சிக்கு வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


Karnataka Election Results 2023 LIVE: கர்நாடகாவில் தொடர்ந்து சரிவை சந்திக்கும் பாஜக அமைச்சர்கள்..! காங்கிரஸ் முன்னிலை...! தகவல்கள் உடனுக்குடன்..!


இதனிடையே இன்று காலை 8 மணிக்கு கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஆரம்பம் முதலே காங்கிரஸ், பாஜக இடையே இழுபறி இருந்த நிலையில், 9 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ள நிலையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும் சொல்லப்பட்டுள்ளது. 


இப்படியான நிலையில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததை விட அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அங்கு ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 125க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உள்ளது.  இதனையொட்டி காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெண் தொண்டர் ஒருவர் குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.