ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணிக்கு எதிராக மும்பை அணி பெற்ற அபார வெற்றியை தொடர்ந்து புள்ளிப்பட்டியலில்  3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் சீசன்:

16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களிலும், தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 57 லீக் போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக அணிகள் முட்டி மோதி வருகின்றன. அதிலும் முதல் இரண்டு இடங்களை குஜராத் மற்றும் சென்னை அணிகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், கடைசி இரண்டு இடங்களுக்கு மற்ற அணிகள் கடுமையாக போராடி வருகின்றன.

நேற்றைய போட்டி:

வான்கடே  மைதானத்தில் நேற்று நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத்  அணியில் ரஷித் கான் அதிரடியாக ஆடினாலும், மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காததால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. 

இதனால் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது நடப்பு தொடரில் அந்த அணி பெறும் ஏழாவது வெற்றி ஆகும்.  இதனால், புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேற, மற்ற அணிகள் எந்தெந்த இடங்களுக்கு மாற்றம் கண்டுள்ளன என்பதை தற்போது அறியலாம்.

புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
குஜராத் 12 8 4 16
சென்னை 12 7 4 15
மும்பை 12 7 5 14
ராஜஸ்தான் 12 6 6 12
லக்னோ 11 5 5 11
பெங்களூரு 11 5 6 10
கொல்கத்தா 12 5 7 10
பஞ்சாப் 11 5 6 10
ஐதராபாத் 10 4 6 8
டெல்லி 11 4 7 8

முதல் நான்கு இடங்களில் யார்?

குஜராத் அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் எட்டில் வென்று 16 புள்ளிகளுடன் தொடர்ந்து வலுவாக முதலிடத்தில் நீடிக்கிறது. அதேபோன்று சென்னை அணியும் 12 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எதும் எட்டப்படவில்லை. இதனால் 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்றைய வெற்றி மூலம், மும்பை அணி 14 புள்ளிகள் பெற்று ரன் 3வது இடத்திற்கு முன்னேறிள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

மற்ற அணிகளின் நிலை:

லக்னோ அணி 11 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள்  தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. அதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முறையே 6 முதல் 8வது இடங்களில் நீடிக்கின்றன. ஐதராபாத் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் தலா 10 போட்டிகளில் விளையாடி அதில் நான்கில் வெற்றி கண்டு 8 புள்ளிகளுடன் கடைசி இரண்டு இடங்களில் நீடிக்கின்றன.

இன்றைய போட்டி:

பிளே ஆஃப் சுற்று நெருங்கி வரும் சூழலில், ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. மற்றொரு போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பஞ்சாப் அணியால், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும்.