கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஒப்புக் கொண்டுள்ளார். 


நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அங்கு கடந்த மே 10 ஆம் தேதி 224 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம்  73.19 சதவீதவாக்குகள் பதிவாகிய நிலையில் இன்றைய தினம் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்களுக்கு அதிகமாகவே முன்னிலை வகிக்கிறது. 



அதேசமயம் தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்த ஒரே மாநிலமான கர்நாடகாவில் அந்த கட்சி தோல்வியை தழுவியிருப்பது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே பிரதமர் மோடி, பிற மாநில முதலமைச்சர்கள், மாநில பாஜக தலைவர்கள், மூத்த தலைவர்கள் கர்நாடகாவில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டும் அவை எதுவும் கைக்கொடுக்காததால், கட்சி தலைமை அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 


இதனிடையே இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் நம்பிக்கை பொய்யாகும்படி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பசவராஜ் பொம்மை, தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். 


இதுதொடர்பாக பேசிய அவர், ”கர்நாடகா தேர்தலில் எங்களால் முத்திரை பதிக்க முடியவில்லை. முடிவுகள் வந்தவுடன் தோல்விக்கான காரணம் குறித்து விரிவான ஆய்வு செய்யப்படும். தேசியக் கட்சி என்ற வகையில் தேர்தலில் செய்யப்பட்ட குறைபாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும். இந்த தோல்வியை நாங்கள் எங்கள் முன்னேற்றத்திற்கான எடுத்துக்கொள்கிறோம்”  என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: Karnataka Election Results 2023 LIVE: கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்..தென்னிந்தியாவில் இருந்து நடையைக் கட்டும் பாஜக! தகவல்கள் உடனுக்குடன்..!