கண்டாங்கி சேலை, அரியக்குடி குத்துவிளக்கு, ஆத்தங்குடி டைல்ஸ், செட்டிநாடு பலகாரம் என பல்வேறு தனித்துவங்களை காரைக்குடி கொண்டிருக்கிறது. இந்திய அளவில் போட்டி போடும் அளவிற்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது. காரைக்குடியை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக உள்ளது. இப்படி பல்வேறு பெருமைகளையும், பிரச்னைகளையும் கொண்டது தான் காரைக்குடி தொகுதி. சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன.

 



அதில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய நான்கு தொகுதியில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளன. இதில் காரைக்குடி தொகுதி ஒரு வி.ஐ.பி தொகுதி என்றே சொல்ல வேண்டும். பி.ஜே.பி சார்பாக ஹெச்.ராஜா, காங்கிரஸ் சார்பகா ப.சிதம்பரம் ஆதரவாளர் மாங்குடி, அமமுக சார்பாக மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் தேர்தலில் களம் கண்டனர்.

மூன்று வேட்பாளர்களும் நல்ல ஆதரவு பெற்றவர்கள் என்பதால் காரைக்குடியில் மும்முனை போட்டியே நிலவியது. காங்கிரஸ் - பி.ஜே.பி நேரடியாக மோதியதால் பாராளுமன்ற தேர்தல் போல தேசிய தலைவர்களும் பலரும் பிரச்சாரத்திற்கு வந்து சென்றனர். இதனால் காரைக்குடி அரசியல் களம் கோடை வெயிலில் கூடுதல் சூடுபிடித்தது.  காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு ஏற்கனவே வாங்கிய புவிசார் குறியீடை மீண்டும் பெற்றுத் தருவதாக ஹெச்.ராஜா நோட்டீஸ் அடித்து பிரச்சாரம் செய்தது கலகலப்பை ஏற்படுத்தியது.

 



ஹெச்.ராஜாவை தோற்கடிக்க வேண்டும் என ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு கடுமையாக பணி செய்தனர். அமமுக சார்பாக சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி காரைக்குடியில் களம் கண்டது வெகுவாக பேசப்பட்டது. இதனால் மும்முனை போட்டியை சந்திக்கும் தொகுதியாக மாறியது. இந்நிலையில் காரைக்குடியில் யார் வெற்றி பெருவது என்ற எதிர்பார்ப்பு இருந்துவருகிறது.



தமிழகத்தில் உள்ள பி.ஜே.பி தொண்டர்களும் மற்ற அரசியல் கட்சியினரும் காரைக்குடி தொகுதியை ஒரு கண் வைத்தே கவனிக்கின்றனர். காரைக்குடியில் ஹெச்.ராஜா வெற்றி பெறுவது சந்தேகமான ஒன்றாக தான் இருக்கிறது. ஹெச்.ராஜாவுக்கு கடுமையான எதிர்ப்பலை இருந்த போதிலும் ஆதரவு அலையும் சமமாக வீசியதையும் பார்க்க முடிந்தது. எனினும் சிறிது அளவு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று பரவலாக பேசப்படுகிறது. சிதம்பரம் தனது ஆதரவாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் தனது மானப்பிரச்னை போன்றும் கருதி வேலை செய்ததாக கூறப்படுகிறது. அதே அளவு ஹெச்.ராஜாவும் தொகுதியில் வேலை செய்தார். அமமுக வாக்குகள் இங்கு முக்கியமான ஒன்று என்பதால் மூன்று வேட்பாளரும் வெற்றியை எதிர்பார்த்து வருகின்றனர். காரைக்குடியில் உள்ள வெல்லப்போவது யார் பொறுத்திருந்து பார்ப்போம்.