சின்ன வயசுல   தலையணையை வைத்துக்கொண்டு நமது நண்பர்களுடனோ , சகோதர- சகோதரிகளுடனோ தலையணை சண்டை போட்டிருப்போம். தூங்குவதற்கு முன்பு வேடிக்கையாக செய்யும் அந்த விளையாட்டை சாம்பியன்ஷிப் போட்டியாக நடத்தியுள்ளனர் அமெரிக்கர்கள். இதனை Pillow Fight Championship (PFC) என அழைக்கின்றனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற மாகாணமான புளோரிடாவில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கிய தலையணை சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. இதன்  இறுதிப்போட்டிகள் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டு , வெற்றி பெற்ற  வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது . இந்த போட்டியில் 16 ஆண்களும் எட்டு பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். ஆண்கள் - பெண்கள் என இரு பிரிவுகளாக நடந்த போட்டி மிகுந்த சுவாரஸ்யத்துடன் களைகட்டியுள்ளது.



குத்துச்சண்டை , மல்யுத்தம் என ரத்தம் தெறிக்க தெறிக்க விளையாடும் போட்டியை கண்டுகளிக்க பலரும் ஆர்வம் காட்டும் நிலையில் , இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவ் வில்லியம்ஸ் அதிலிருந்து மாறுபடுகிறார். தலையணையை வைத்து விளையாடுவது நம் அனைவருக்கு பழகிய ஒன்று , பிடித்த ஒன்று இதனை ஒரு குத்துச்சண்டைக்கான வளையத்திற்குள் நிகழ்த்தினால் எப்படி இருக்கும் என யோசித்துதான் இந்த போட்டியை நடத்த திட்டமிட்டுருக்கிறார். பொதுவாக சண்டை என்றாலே கோபம் , ரத்தம், காயம் என அரங்கமே அதிர்ச்சியில் அமர்ந்திருக்கும் . பெரும்பாலோனர் இதனை விரும்புவதில்லை . அவர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் நோக்கில்தான் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டதாக கூறுகிறார் வில்லியம்ஸ்.  தலையணை சண்டையில் போட்டியாளர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அனைவரும் வயிறு குலுங்க சிரித்து போட்டியை ரசித்துள்ளனர். இது விளையாட்டுக்கான ஒரு மாறுதல் என்கிறார் வில்லியம்ஸ்.






தலையணை சாம்பியன்ஷிப் போட்டியில் பெரும்பாலும் குத்துச்சண்டை வீரர்கள் , தற்காப்பு கலைகள் அறிந்த வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். தலையணை சண்டைதானே இதில் என்ன சிரமம் இருக்கிறது  என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள் . இதற்காகவே பிரத்யேகமாக அதிக எடை கொண்ட தலையணைகள் உருவாக்கப்பட்டுள்ளது.  போட்டியின் முடிவில் பெண்கள் தரப்பில், பிரேசில் வீராங்கனை இஸ்டெலா நூன்ஸ், அமெரிக்க வீராங்கனை கெண்டல் வோல்கரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.அமெரிக்கரான ஹவ்லி டில்மேன் நாட்டு வீரர் மார்கஸ் பிரிமேஜை தோற்கடித்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கான பெல்ட் , கோப்பை மற்று 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.