2022 - 2023ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையின் நேற்று (பிப்ரவரி 1ம் தேதி) தாக்கல் செய்தார். 


கடந்த ஆண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான  மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 2070ம் ஆண்டில் இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என அறிவித்தார். இந்த அறிவிப்பிற்குப் பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் சற்று கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.



மத்திய நிதி அமைச்சர் நிர்மலா


கடந்த சில ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் முதல் முறையாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு 3,030 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிடுகையில் 5.6% அதிகமாகும். 


சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறையை எடுத்துக் கொண்டால் ஒட்டுமொத்தமாக அதிக நிதி ஒதுக்கீடு என்றாலும் சில முக்கியமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட குறைவாகும். குறிப்பாக தேசிய மாசற்ற காற்று திட்டம் உள்ளிட்ட  மாசுபாடு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.10கோடி குறைவு. 


தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க அமைக்கப்ப்பட்ட குழுவிற்கு ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.3 கோடி குறைவு. க்ரீன்பீஸ் அமைப்பின் ஆய்வின்படி இந்தியாவில் 2020ம் ஆண்டில் மட்டும் காற்று மாசுபாடு தொடர்பான பிரச்சனைகளின் காரணமாக 1,20,000 பேர் உயிரிழந்துள்ளனர். வேறொரு ஆய்வின்படி இந்தியா முழுவதும் போதுமான அளவில் காற்றுத் தர கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்துவதற்கே ரூ. 7,500 கோடி தேவை. இப்படியான நிலையில் சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் “ காலநிலை மாற்றத்தின் அபாயங்கள் இந்தியாவையும் பிற நாடுகளையும் பாதிக்கும் வலுவான எதிர்மறை புறக் காரணிகளாகும்” எனக் கூறினார். மேலும் “Climate Action” என்கிற வார்த்தையை மட்டும் தனது உரையில் ஐந்து முறை பயன்படுத்தி இருந்தார். ஆனால், நிதி ஒதுக்கீட்டில் காலநிலை மாற்றத்திற்கான செயல் திட்டத்திற்கு(climate change action plan) கடந்த ஆண்டைப் போலவே ரூ.30 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 


இது மிக மிக குறைவான தொகையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீருக்கான குழுமத்தின் ஆய்வின்படி 2070ம் ஆண்டில் கார்பன் சமநிலை என்கிற இலக்கை அடைய மொத்தமாக ரூ. 105 லட்சம் கோடி தேவைப்படும். ஓராண்டிற்கு மட்டும் ரூ. 2.1 லட்சம் கோடி தேவைப்படும்.  இது தொடர்பாக கருத்து தெரிவித்த சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் “ இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் காலநிலை மாற்ற செயல் திட்டத்திற்காக ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்வது நகைச்சுவையான விஷயம். இந்த நிதியானது ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் மண்டல அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட (ரூ.50 லட்சம்) குறைவானதாகும்” என்றார்.


நம்பிக்கை அளிக்கும் வகையில் புலிகள் பாதுகாப்பிற்கான புலிகள் திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.50 கோடி அதிகமாகும். யானைகள் வழித்தடங்களை, வாழ்விடங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட யானைகள் திட்டத்திற்கு ரூ.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.2 கோடி அதிகமாகும்.


இது தொடர்பாக நம்மிடம் பேசிய காட்டுயிர் ஆர்வலர் ஓசை காளிதாசன் “ புலிகள் பாதுகாப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால், யானைகள் திட்டத்திற்கு ரூ.2 கோடி மட்டுமே கூடுதல்  நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வருந்தத்தக்கதாகும். தொடர்ந்து பல ஆண்டுகளாக புலிகள் திட்டத்திற்கு நிகராக யானைகள் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்து வருகிறோம். புலிகளை விட அண்மை காலங்களில் யானைகளின் வழித்தடங்கள், வாழ்விடங்கள் பாதிப்படைந்துள்ளன. யானை – மனித மோதல்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புலிகள் திட்டத்திற்க்கு நிகராக நிதி ஒதுக்கப்பட்டால் மட்டுமே யானைகள் பாதுகாப்பை மேம்படுத்த முடியும்” என்றார். 


தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கடற்கரை மற்றும் மீனவர்களின் வாழ்விட பாதுகாப்பு உள்ளிட்டவை அடங்கிய தேசிய கடற்கரை பணிக்கு ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.5 கோடி குறைவாகும்.  


தன்னாட்சி அமைப்புகளான ஜி.பி.பந்த் இமாலய சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு கல்வி நிறுவனம், இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக் குழுமம், இந்திய வன மேலாண்மை நிறுவனம், இந்திய ஒட்டுப்பலகை தொழிலக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம், இந்திய வனவுயிர் கல்வி நிறுவனம் ஆகிய ஐந்து அமைப்புகளுக்கும் நடப்பாண்டில் ரூ.287.45 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்த தன்னாட்சி அமைப்புகளுக்கு ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.



ஓசை காளிதாஸ்



“இது மிகவும் தவறான நடவடிக்கை” என்கிறார் ஓசை காளிதாசன். அவர் மேலும் கூறியதாவது “ இத்தகைய ஆராய்ச்சி மற்றும் கல்வியியல் நிறுவனங்கள் இந்தியாவின் காடு, காட்டுயிர், வாழிடங்கள், வழித்தடங்கள் குறித்து மேற்கொள்ளும் விரிவான மற்றும் தெளிவான ஆய்வுகளை வைத்தே நாம் காடுகளையும் காட்டுயிர்களையும் பாதுகாத்து வருகிறோம். இந்த நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்தால் காடுகள் பாதுகாப்பில் அரசு அலட்சியம் காட்டுவதாகவே பொருள். இந்த நிலை தொடர்ந்தால் தனியார் ஆய்வு நிறுவனங்களையும் அவர்களின் ஆய்வுகளையுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் உண்டாகும். அத்தகைய தனியார் நிறுவனங்களில் காடுகள், காட்டுயிர் குறித்த உண்மையான அக்கறையுடன் ஆய்வு செய்பவர்கள் குறைவு. அவர்களிடத்தில் வணிக நோக்கம் மட்டுமே அதிகரித்து காணப்படும்” என்றார்.


பிரதமர் மோடி கிளாஸ்கோ மாநாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பஞ்சமிர்த கொள்கைகளை அறிவித்திருந்தார். ஆனால், அந்த அறிவிப்புகளை நடத்திக் காட்டுவதற்கான Nationally Determined Contributions என்கிற செயல் திட்டங்களை இன்னமும் ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்ப்பிக்கவில்லை. அதேபோல பட்ஜெட் உரையில் ஈர்க்கக் கூடிய பல பச்சைப் பாசாங்கு வார்த்தைகள் இடம் பெற்றிருந்தாலும் நிதி ஒதுக்கீட்டில் அவை போதுமான அளவில் எதிரொலிக்கவில்லை.