Kanchipuram Election Results 2024: நாட்டில் மிக அதிகாரம் மிக்க பதவியான பிரதமரை தேர்ந்தெடுக்கும், மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. நாடு முழுவதும் இருக்கும் அனைத்து மக்கள் கவனமும் தேர்தல் முடிவுகள் பக்கம் திரும்பி உள்ளது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வோம்.



காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுகள் - Kanchipuram lok sabha election result 2024



நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 17.48 லட்சம் வாக்காளர்களில், 12.53 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 71. 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 1932 மின்னணு வாக்கு இயந்திரங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 



காஞ்சிபுரத்தில் களத்தில் உள்ள வேட்பாளர்கள் 


காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் க. செல்வம், அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் இராஜசேகர், தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமார் ஆகிய பிரதான வேட்பாளர்கள் காஞ்சிபுரத்தில் களத்தில் உள்ளனர். இவற்றில் திமுக- அதிமுக - பாமக ஆகிய வேட்பாளர்கள் இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை விவரம் 



காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்போரூர், உத்திரமேரூர், செய்யூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் 31 சுற்றுகளும், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் 22 சுற்றுகளும், செய்யூர் சட்டமன்ற தொகுதியில் 18 சுற்றுகளும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் 19 சுற்றுகளும், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 23 சுற்றுகளும், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 21 சுற்றுகளும் என 134 சுற்றுகள் வாக்கிய எண்ணிக்கை நடைபெற உள்ளது. 14 மேஜைகள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



முருகர் கோயிலுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள் 




காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், முருகர் கோயிலுக்கு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் படையெடுக்க துவங்கியுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உரிய நாள் என்பதால் காஞ்சிபுரம் புகழ்பெற்ற குமரக்கோட்டம் கோயிலில் அரசியல் கட்சியினர் சாமி தரிசனம் மேற்கொள்ள சென்று உள்ளனர். இதனால் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வழக்கத்தை விட அதிக வாகனங்கள் வெளியில் காத்திருக்கின்றன. அனைத்து வேட்பாளர்களும் அனைத்து அரசியல் கட்சியினரும் முருகரை வணங்குவதால், முருகர் யாருக்கு அருள் புரிவார் என கேள்வி எழுந்துள்ளது.