தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, பல்வேறு கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இப்பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்பு மனுத்ட் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் பி.பி.இ உடை அணிந்து வந்த சுயேட்சை வேட்பாளர் வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.




கோவை மாநகராட்சியில் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94 வார்டில் சக்திவேல்(45)  என்ற சுயேட்சை வேட்பாளர் போட்டியிட உள்ளார். நேற்று  சக்திவேல் குனியமுத்தூர் பகுதியில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். கொரோனா கவச உடையான பிபிஇ உடை அணிந்தபடி சென்று சக்திவேல் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் மனுத் தாக்கல் செய்துள்ளார். முதலில் இவரது உடையை கண்டு அதிகாரிகள் வியப்படைந்த நிலையில் இவரின் விளக்கத்தை கேட்டப்பின் மனுவை பெற்று கொண்டனர். கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் எனபதை உணர்த்துவதற்காக பிபிஇ உடை அணிந்தபடி சென்று வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார். மேலும் கொரோனா காலத்தில் பல்வேறு சேவைகளை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.




கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக 93 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்ட கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டு எண்ணிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்பட்டது.


அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரட்டை இலக்க வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விரும்பும் நிலையில், 5 க்கும் குறைவான வார்டுகளை மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி இடையே வார்டு ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.