கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கல்வராயன்மலை பொருப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சன் மகன் கந்தசாமி (27). கேரளாவில் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்த இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதை அடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுநீரக நோயால் அவதியுற்று வந்த கந்தசாமிக்கு நேற்று நோய் பாதிப்பு அதிகரித்து உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து மாவடிப்பட்டு அரசு மருத்துவ மனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் பொருப்பம் கிராமம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பலாபூண்டி கிராமத்தில் வந்த போது அங்கிருந்து பொருப்பம் கிராமத்துக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தால் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர் மதியழகன் ஆம்புலன்ஸ் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு கந்தசாமியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
“தாடியை எடுத்தேன்... ஹோட்டலுக்கு உள்ளே கூட என்னை விட மாட்டேனுட்டாங்க“ - நடிகர் சசிகுமார்
இதையடுத்து கந்தசாமியை அவரது உறவினர்கள் கட்டிலில் வைத்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமந்தபடி ஆம்புலன்ஸ் நின்ற இடத்துக்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து அவரை ஆம்புலன்சில் சிகிச்சைக்காக மாவடிப்பட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கந்தசாமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சாலை வசதி இல்லாததால் நோயாளியை அவரது உறவினர்கள் 3 கிலோ மீ்ட்டர் தூரத்துக்கு கட்டிலில் வைத்து தூக்கி சென்ற அவலம் அந்த பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கல்வராயன் மலையில் பல கிராமங்களில் சாலை வசதி இல்லாததால் முதியோர்கள், நோயாளிகளை இது போன்று தலை மற்றும் தோளில் வைத்து சுமந்து செல்லும் அவலம் தொடர்வதாகவும், எனவே ஏழை, எளிய மக்களின் நலன் கருதி கல்வராயன் மலையில் உள்ள கிராமங்களுக்கு போதிய சாலை வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்