இரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த அமெரிக்க பெண் ஒருவர் எச்.ஐ.வி கிருமியில் இருந்து முழுமையாக குணமடைந்தது தெரியவந்துள்ளது.உலகளவில் எச்.ஐ.வி நோய்க் கிருமியில் இருந்து வெளிவந்த முதல் பெண்ணாகவும், மூன்றாவது நபராகவும் உள்ளார்.
எச்ஐவி என்பது மனிதர்களின் எதிர்ப்புச் சக்தியை அழிக்கும் ஒரு நுண்ணிய கிருமியாகும். இவ்வாறு, நோய்த் தொற்று குறைவடையும் போது, நியூமோசிஸ்திஸ் நியூமோனியா, காசநோய், புற்று நோய்கள் ஏற்படும் நிலைமை எய்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
முன்னதாக, எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான மற்றும் எலும்பு மச்சை வரிசையிலுள்ள இரத்த செல்களில் உருவான புற்று நோய்க்கு அமெரிக்க பெண் ஒருவர் சிகிச்சைப் பெற்றுவந்தார். இவருக்கு, தொப்புள் கொடி இரத்தம் (Umblical cord blood) செலுத்தப்பட்டது. இந்த சிகிச்சை அளிக்கப்பட்டத்தில் இருந்து சுமார் 14 மாதங்களில் இவர் எச்ஐவி நோய்க் கிருமியில் இருந்து முழுமையாக விடுபட்டிருக்கிறார்.
மருத்துவ உலகைப் பொருத்துவரையில் இதுவரை இரண்டு நபர்கள் மட்டுமே எச்ஐவி கிருமியில் இருந்து மீண்டிருக்கின்றனர். முன்னதாக, ஜெர்மனியின் பெர்லினில் பத்து வருடங்களுக்கு மேலாக எச் ஐ வி நோய்தொற்றறினால் அவதிப்பட்டு வந்த இரத்தப்புற்று நோயாளிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இந்த சிகிச்சை மூலம் அவரது இரத்தத்தில் எச்.ஐ.வி நோய்க் கிருமி அகற்றப்பட்டதாக கூறப்பட்டது. 'பெர்லின் நோயாளி' (Timothy Ray Brown) என்ற மருத்துவ அடைமொழி கொண்ட இவர் உலகில் எச்.ஐ.வி கிருமியிலிருந்து மீண்ட முதல் நபராவார். அதற்கு அடுத்தப்படியாக, கடந்த 2019ம் ஆண்டு Adam Castillejo என்ற நபரும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மூலம் எச்.ஐ.வி கிருமியிலிருந்து முழுமையாக மீண்டார்.
எலும்பு மஜ்ஜை மாற்றுதல் (பிஎம்டி) அல்லது ஸ்டெம் செல் மாற்று என்பது சேதமடைந்த அல்லது நோயுற்ற எலும்பு மஜ்ஜையை ஆரோக்கியமான இரத்தத்தை உருவாக்கும் ஸ்டெம் செல்கள் மூலம் மாற்றுவதற்கான ஒரு செயல்முறையாகும். உங்கள் எலும்பு மஜ்ஜை சரியாக வேலை செய்வதை நிறுத்தி, போதுமான ஆரோக்கியமான இரத்த அணுக்களை உருவாக்காதபோது இது தேவைப்படுகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை உங்கள் சொந்த உடலில் இருந்து செல்களை எடுத்து அல்லது ஒரு நன்கொடையாளரிடமிருந்து பெற்று செய்யலாம் - அப்பொல்லோ
முந்தைய இரண்டு சிகிச்சைகளும், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால், இந்த வகை சிகிச்சைகள் மிகவும் சிக்கலானதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் இடமாற்றம் செய்யப்பட்ட மஜ்ஜையை நோயாளியின் உடல் நிராகரிக்கலாம் (invasive and risky) அல்லது நன்கொடையாளர் ஸ்டெம் செல் நோயாளிக்கு எதிராக செயல்படலாம் (Graft Vs Host Disease). மேலும், புற்றுநோயின் இறுதிக்கட்டத்தில் தவிர்க்க முடியாத சூழலில் தான் இந்த சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால், தொப்புள் கொடி இரத்த சிகிச்சை முறை மிக எளிமையானதாகவும், பல தரப்பட்ட மனிதர்களுக்கு பயனளிக்க கூடியதாக இருப்பதாகவும் தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வாளார்கள் கூறுகையில், "லுகேமியா புற்றுநோய் சிகிச்சையின் ஒரு பகுதியாக, தானம் பெறப்பட்ட தொப்புள் கொடி இரத்தம், எச்ஐவி கிருமிக்கு உள்ளான பெண் நோயாளிக்கு செலுத்தப்பட்டது. ரத்தம் தருபவர் மற்றும் பெறுபவரின் ரத்த வகைகள் ஓரளவு மட்டுமே பொருத்தியிருந்தன. ஆனால், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையில் இருவரின் ரத்த வகைகளும் அதிகம் பொருந்தியிருக்க வேண்டும். பொதுவாக, ரத்தம் தருபவர் மற்றும் பெறுபவர் இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் உண்டு. இதனால், தானமாக பெறப்பட்ட ஸ்டெம் செல்கள் தேவைப்படுவோருக்கு செலுத்த முடியாத சூழல் நிலவியது.
மேலும், தற்போது எச்ஐவி கிருமியில் இருந்து மீண்டவர் ஒரு பெண், அதுவும் கலப்பின பெண். இந்த முடிவுகள் பல்வேறு சாத்தியக் கூறுகளுக்கு வழிவகுக்கும். உலகளவில் ஆண்களை விட, பெண்களே அதிக ஒதுக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், பெண்களின் உடம்பில் எச்ஐவி வைரஸின் செயல்பாடுகள் சற்று வித்தியசானமாதாக இருக்கின்றது" என்று தெரிவித்தார்.
மேலும், வாசிக்க: