நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தியா - நியூசிலாந்து:
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 மகளிர் போட்டி நேற்று (அக்டோபர் 3) பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்கான முதல் போட்டி இன்று (அக்டோபர் 4) நடைபெற்றது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் , டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சோபி டெவின் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்கம் முதல் நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில் சூசி பேட்ஸ் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .
தொடர்ந்து ஜார்ஜியா 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . பின்னர் சிறப்பாக விளையாடிய சோபி டெவின் அரைசதமடித்தார் . இறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தோல்வி:
தொடர்ந்து 161 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி தங்களது முதல் போட்டியிலேயே இந்திய அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.