Harsha Bhogle: இந்தியாவில் கிரிக்கெட் வர்ணனை என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ஹர்ஷா போக்லேதான். அசாத்திய திறன்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் தனது வர்ணனையை ஒலிக்க செய்தவர். 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப், இரு தரப்பு போட்டிகள், ஐபிஎல் என பல தொடர்களில் வர்ணனை செய்து அசத்தியுள்ளார்.


கிரிக்கெட்டில் உள்ள நுணுக்கங்களை தனது வர்ணனை மூலம் இளைஞர்களுக்கு எடுத்து சென்ற ஹர்ஷா போக்லேவுக்கு 40 ஆண்டுகாலம் அனுபவம் உள்ளது. கிரிக்கெட் குறித்து தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தாலும், பொது பிரச்னைகள், அரசியல் பற்றி பேசாமல் இருந்து வந்தார்.


அரசியல் பேசிய ஹர்ஷா போக்லே:


தேர்தல் நெருங்கும் சூழலில், அரசியல் குறித்து ஹர்ஷா போக்லே கருத்து தெரிவித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முன்னாள் பிரதமர்கள் இருவரை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.


எக்ஸ் தளத்தில் ஹர்ஷா போக்லே வெளியிட்டுள்ள பதிவில், "நான் அரசியலைப் பின்பற்றுவதில்லை. ஆனால், எனக்குப் பிடித்த சம்பவம் ஒன்று இருக்கிறது. இந்தியாவின் பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ், ஐ.நா.வுக்கு காஷ்மீர் குறித்த முக்கிய விவாதத்திற்காக இந்தியக் குழுவை வழிநடத்த, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாயிடம் கோரிக்கை விடுத்தார். 


வாஜ்பாய் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். நாட்டின் பொது நலத்திற்காக அரசியல் வேறுபாடுகளை அவர்கள் ஒதுக்கி வைத்தார்கள். பல வேறுபாடுகளுக்கு மத்தியில் அடக்கமாகவும் மரியாதையுடனும் வாழ இது ஒரு அழகான வழி" என குறிப்பிட்டுள்ளார்.


பா.ஜ.க.வை விமர்சித்தாரா?


காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நரசிம்மராவும் பா.ஜ.க.வை சேர்ந்த வாஜ்பாயும் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த சூழலிலும் காஷ்மீர், அணுகுண்டு சோதனை போன்ற பல்வேறு விவகாரங்களில் இணக்கமாக செயல்பட்டனர்.


ஆனால், தற்போது, எதிர்க்கட்சிகளுடன் இணக்கமாக செயல்படும் தன்மை முற்றிலுமாக இல்லை என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். தேர்தல் நெருங்கும் சூழலில், மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 


 






இச்சூழலில், ஹர்ஷா போக்லேவின் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாஜகவை விமர்சிக்கும் வகையில் இந்த கருத்து தெரிவித்தாரா? என கேள்வி எழுந்துள்ளது. இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


இதையும் படிக்க: அரசியலில் புது இன்னிங்ஸ்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவையில் இருந்து விடைபெற்ற சோனியா காந்தி!