விடாமுயற்சி


நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானின் நடைபெற்று வருகிறது. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் இருந்து படப்பிடிப்பு காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா.


இந்த வீடியோவில் அஜித்குமார் மற்றும் ஆரவ் ஆகிய இருவரும் காருக்குள் அமர்ந்திருக்கிறார்கள். அஜித் காரை  ஓட்டிச் செல்ல கார் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் சரிந்து  விபத்திற்குள்ளாகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக நினைத்தார்கள். ஆனால் இது படத்தின் ஒரு காட்சி என்றும் அஜித் இந்த ஸ்டண்டை டூப் இல்லாமல் நிஜமாக செய்திருக்கிறார் என்பதை காட்டும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டண்ட் என்றாலும் இப்படியான காட்சிகள் பயிற்சி தேர்ந்த பயிற்சி பெற்றவர்கள் செய்யும்போதே தங்கள் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறார்கள். 


நடிகர் அஜித்தின் உடல் மீதும் அவரது ஃபிட்னஸ் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைக்கப் படுகின்றன. ஆனால் தனது 52 வயதிலும் அஜித் குமார் இப்படியான ஒரு ஸ்டண்ட் காட்சியை டூப் இல்லாமல் செய்து காட்டி வயது என்பது வெறும் ஒரு எண் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்த வீடியோ தொடர்பாக நடிகர் ஆரவ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த போது தானும் அஜித் குமாரும் நூல் இழையில் உயிர் தப்பியதாக பதிவிட்டுள்ளார். 








ஏற்கனவே வலிமை படத்தின் போது நடிகர் அஜித் பைக்கில் இருந்து விழுந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்குமாரை பொறுத்தவரை அவருக்கு இது எல்லாம் சகஜம் என்றுதான் சொல்வார்.


குட் பேட் அக்லி


விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். திருஷா இல்லனா நயன்தாரா , AAA , பகீரா  உள்ளிட்டப் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் , கடந்த ஆண்டு விஷால் ,எஸ்.ஜே சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார். இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடி வசூல் ஈட்டியது.