Sonia Gandhi: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்.


சோனியா காந்தி கடந்து வந்த பாதை:


வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்குகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால், பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 


இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்று கொண்டார். கடந்த 20 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக இருந்து வந்த சோனியா காந்தி, தற்போது மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் ரே பரேலி தொகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 5 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற சோனியா காந்தி, இந்த முறை 6ஆவது முறையாக களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்டது.


மக்களவை தேர்தலில் போட்டியிடாதது ஏன்?


ஆனால், உடல்நல பிரச்னை காரணமாக தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி களம் கண்டார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அதே உறுப்பினர் பதவிக்கு புதிதாக தேர்வாகியுள்ளார் சோனியா காந்தி.


பாஜக மாநிலங்களவை தலைவர் பியூஷ் கோயல், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். அவரது மகள் பிரியங்கா காந்தி, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, "காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்திக்கு எனது வாழ்த்துகள். சோனியா காந்தி இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதன் மூலம் தனது புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.


பல தோல்விகளுக்கு பிறகும் துணிச்சலாக மீண்டெழுந்து வந்தது, கண்ணியமான செயல்பாடுகள், பல சவால்களுக்கு மத்தியில் எழுச்சியின் பின்னணியில், நம்மை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வழிநடத்துவார். 


 






மக்களவையில் 25 ஆண்டுகளாக சேவை ஆற்றியுள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் மேல்சபையில் அவரது இருப்பை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.