நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி  மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ளது, மொத்தமாக உள்ள 397 பதவிகளுக்கு 9 பேர் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 388 பதவி இடங்களுக்கு 1790 பேர் போட்டியிடுகின்றனர்.


நெல்லை மாவட்டத்தில் மொத்தமாக 7,54,504 பேர் வாக்களிக்க உள்ளனர்,  இதற்காக 932 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சியை பொறுத்தவரை  55 வார்டுகளுக்கு 490 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்களிக்க தயாராக வைக்கப்பட்டிருந்த வாக்குபதிவு எந்திரங்களில் கடந்த வாரம் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சின்னங்கள், வேட்பாளர்களின் பெயர்கள் பொறுத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குபதிவு எந்திரங்கள் , அழியா மை, பேலட்பேப்பர் உள்ளிட்ட 68 பொருட்கள்  மற்றும்  24 பொருட்கள் அடங்கிய கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்  ஆகியவை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஷ்ணுசந்திரன் முன்னிலையில் வாகனங்களில் ஏற்றப்பட்டு பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 




 


குறிப்பாக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1127 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1127 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் என மொத்தமாக 2254 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது, நெல்லை மாநகர பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலிசாருடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது, மேலும் இந்த தேர்தல் பணியில் 3,728  அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர், அவர்களுக்கு வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைத்து பணியாணை வழங்கப்பட்டு அவர்கள் உடனடியாக வாக்குசாவடி மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.




 இதுபோன்று  அம்பாசமுத்திரம் , விக்கரமசிங்கபுரம் , மற்றும் களக்காடு ஆகிய நகராட்சி அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்கு பதிவு எந்திரங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் உள்ள வாக்குபதிவு எந்திரங்கள் என அனைத்து வாக்குச்சாவடிக்களுக்கும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 274 வாக்குச்சாவடிக்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீசார்  பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர்புற உள்ளாட்சித்  தேர்தலை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர், அதே போல நெல்லை மாவட்டத்தில் 22 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையானது மொத்தம் 5 இடங்களில் நடைபெற உள்ளது, இதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது,