சொந்த பூமியில் சூரத்தேங்காய் உடைக்கப்பட்டதைப் போல ஆகிவிடும் ஆபத்தை அரசியல்வாதிகள் எப்போதும் எதிர்நோக்க வாய்க்கலாம் என்றாலும், சில நேரங்களில் வழிவழியான அம்சங்கள் சாதகத்தையும் தரக்கூடும். இந்தத் தேர்தலில் தென் தமிழ்நாடு அப்படியாக அதிமுகவுக்கு கைகொடுத்திருக்கக்கூடும் என்று ஏபிபி சி ஓட்டர் வாக்குக் கணிப்பு.
வடக்கே திண்டுக்கல் தொடங்கி, தேனி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, குமரிவரை நீளும் தென் தமிழ்நாடு கலவையான மனநிலைகளைக் கொண்ட வட்டாரம். இருந்தாலும் பல தேர்தல்களில் ஒருங்கிணைந்த குரலை வெளிப்படுத்தியிருக்கிறது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் கணிசமான செல்வாக்குள்ள தென் தமிழ்நாட்டின் வடபகுதி, சில சாதிய ஆதரவுக் கட்சிகளின் உறுதியான வாக்குவங்கி, குமரிமுனையை நோக்கி செல்லச்செல்ல அகில இந்தியக் கட்சிகளின் ஆதிக்கம் என வகைபிரித்து வாக்களிக்கும் வித்தியாசமான மண்டலம், இது.
மொத்தமுள்ள 58 தொகுதிகளில் கடந்த முறை 32 இடங்களை அதிமுக அணியும் 26 இடங்களை திமுக அணியும் கைப்பற்றின.
இந்த முறை அது அப்படியே உல்டாவாக மாறும் வாய்ப்பு காணப்படுகிறது. அதிமுக தரப்புக்கு 22 இடங்களும் திமுக தரப்புக்கு 34 இடங்களும் கிடைக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. அதாவது அதிமுக அணிக்கு இழப்பு கணக்கில் 10 இடங்களும் திமுக கூட்டணிக்கு வரவுக் கணக்கில் 8 இடங்களும் சேர்கின்றன.
வாக்கு சதவீதம் எனப் பார்த்தால், கடந்த முறையைவிட 6.9 சதவீதம் குறைந்து, 39 சதவீதம் பெறுகிறது, அதிமுக அணி. ஆனால், அவ்வளவும் திமுக கூட்டணிக்கு போய்ச் சேரவில்லை என்பது வாக்கு கணிப்பில் தெரிகிறது.
கடந்த தேர்தலில் தென் தமிழ்நாட்டில் 39.5 சதவீதம் பெற்ற திமுக அணிக்கு இந்த முறை 40.7 சதவீதம்தான் கிடைக்கக்கூடும். அதாவது, 1. 2 சதவீதம் மட்டுமே கூடுதல்.
இதில் கணிசமான அளவை தினகரனின் அமமுக அள்ளிக்கொள்கிறது. அதிமுகவுக்குக் குறையும் ஏறத்தாழ 7 சதவீதம் வாக்குகளில் 4.6 சதவீதம் வாக்குகள் அமமுகவுக்கு போகக்கூடும் என்கிறது வாக்காளர்களின் மனவெளிப்பாட்டுக் கணக்கு. புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சி, மநீமையம் ஆகிய பிற கட்சிகளுக்கு 1.1 சதவீதம் வாக்குகள் பிரிந்துசெல்கின்றன.
சதவீதம் இருக்கடும் இடங்கள் எத்தனை எனக் கேள்வி வரத்தான் செய்யும். அமமுகவுக்கு மட்டும் 2 இடங்கள் வரை தென் தமிழ்நாட்டில் கிடைக்கலாம் என்பது கணிப்பின் ஒரு முடிவு. மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பு தெளிவாக இல்லை.
தென்கோடித் தமிழ்நாட்டின் கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற சுற்றுச்சூழல் கேடுகள், இலங்கைப் படையால் சுடப்படும் மீனவர்களின் பாதிப்பு, தென் தமிழ்நாட்டின் வடபகுதியில் தொழில் வேலைவாய்ப்பு இல்லாமை, பெரியாறு அணை பாசன நீர் போன்ற பொதுவான பிரச்னைகள் அதிமுக ஆட்சியில் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை என விமர்சனம் இருக்கிறது. இவை தவிர, தேர்தல் நெருக்கத்தில் சரியாகச் சொன்னால் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்னர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டுச் சட்டம் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது. எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்த இடத்தில் முகத்துக்கு நேராக எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு, சில குறிப்பிட்ட சாதியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
மாநில அளவில் பிரச்சாரம் செய்யவேண்டிய துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தன் வெற்றி கேள்வியாகிவிடுமோ என தொகுதியிலேயே முகாமிட நேர்ந்தது.
தினகரனின் அமமுகவுக்கு மாநிலத்திலேயே இந்த வட்டாரத்தில்தான் அதிக சதவீத ஆதரவும் நம் வாக்குக் கணிப்பில் வெளிப்பட்டுள்ளது. இதில் சுவைமுரணாக, மாநிலத்திலேயே அதிமுக அணிக்கு இங்குதான் குறைவான வாக்கு இழப்பு நம் கணிப்பில் பதிவாகியிருக்கிறது.
ஆக மொத்தம் இழந்த வாக்கு சதவீதத்தில், ஒரு வாதப்படி திமுகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் மாறிய வாக்குகள் போக, அமமுகவின் வாக்குகளையும் அதிமுக வகையறா வாக்காகவும் கணக்கில்கொள்ளலாம்.
அதிமுக 10 தொகுதிகளை இழக்க, திமுகவுக்கு போகக்கூடிய 8 இடங்கள் தவிர, மீதமுள்ள ஒரு இடத்தை அமமுக கைப்பற்றும் என கணிப்பு முடிவு சொல்கிறது. மற்ற கட்சிகளில் ஒன்று இன்னொரு இடத்தைப் பிடிக்கக்கூடும்.
10.5 சதவீத உள் ஒதுக்கீடும் பழைய தேனி மாவட்ட எம்.பி.யான தினகரனின் மீதான பச்சையான பற்றும் என்ன வகையில் வேலைசெய்திருக்கிறது என்பதை விட, வேலைசெய்திருக்கிறது என்பதை மட்டும் நிச்சயமாகக் கூறமுடியும்.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமா இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியா எனப் பார்த்தால், ஓ.பன்னீர் செல்வத்தின் ஏரியா ரொம்பவும் மோசமில்லை என்ற பெயர் வாங்கியுள்ளது. கொங்கு வட்டார வாக்களிப்பில் அமுங்கிப்போயிருக்கும் சாதி, இங்கு திமிறியபடி இருக்கிறது. திரைப்படங்களில் மட்டுமல்ல, தேர்தலிலும் எப்போதும்போல!