பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த 19ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு மொத்தம் 7 கட்டங்களாக நடந்தது. இன்று இறுதி கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
வரும் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகிறது.
மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா கூட்டணி: அந்த வகையில், பல்வேறு செய்தி நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பல்வேறு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு இந்தியா கூட்டணி சவால் அளித்த போதிலும் அது பாஜகவின் வெற்றியை தடுத்து நிறுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் 153 முதல் 183 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெல்லும் என ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 353 முதல் 383 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மட்டும் 315 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்புகளின்படி, பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரையில், 45.1 சதவிகித வாக்குகளை பாஜக கூட்டணி பெறும் என ஏபிபி சி வோட்டர் கணித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன? அதேபோல, 36.6 சதவிகித வாக்குகளை இந்தியா கூட்டணி பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக மோசமான தோல்வியை சந்திக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 21.4 சதவிகித வாக்குகளுடன் 74 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. தோல்வியை சந்தித்த போதிலும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்தியா கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 37 முதல் 39 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சண்டிகர், தாதர் மற்றும் நாகர் ஹவேலி, மிசோரம், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி 1 தொகுதியில் கூட வெற்றிபெறாது என கூறப்பட்டுள்ளது.