தஞ்சாவூர்: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூரில் அதிமுக சார்பில் கருத்து கேட்பு கூட்டம் குழுத் தலைவர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னால் அமைச்சர்கள் செம்மலை, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார், வளர்மதி, வைகை செல்வன், காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: அமித்ஷா அவர் கட்சியின் நிலைப்பாட்டை கூறியுள்ளார். கூட்டணியின் கதவுகள் திறந்து இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். எங்கள் கட்சி நிலைப்பாட்டை பொறுத்தவரை பிஜேபி ஒரு காலத்தில் தோழமையாக இருந்தது. தற்போது அரசியல் ரீதியாக எதிர்க்கின்ற கட்சி. பாஜகவை கழட்டிவிட்ட பிறகு தமிழ்நாடு முழுவதும் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தார்கள்.


இனி எந்த காலத்திலும் இப்போதில்லை எப்போதும், எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்நாடு முழுவதும் வெடி வெடித்துக் கொண்டாடினார்கள். எங்கள் நிலைப்பாட்டை பொறுத்தவரை பாஜவுக்கான கதவு சாத்தப்பட்டு விட்டது‌. அவர்கள் திறந்து வைத்திருக்கலாம். அவர்கள் வரக்கூடாது என்று நாங்கள் சாத்தி விட்டோம். இதுதான் எங்கள் நிலைப்பாடு எப்போதும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


இதேபோல் நத்தம் விசுவநாதன் கூறுகையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுபடி நேற்று தஞ்சை மண்டலத்துக்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள், மீனவர் சங்கங்கள், தொழில் முனைவோர் மற்றும் அனைத்து தரப்பினரிடமும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கருத்து கேட்கப்பட்டது. 


எங்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். அவர்கள் கூறிய கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும். இதேபோல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கருத்துக்கள் கேட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் பல்வேறு பயனுள்ள திட்டங்கள் இருக்கும். 


மற்ற அரசியல் கட்சிகள் தயாரிக்கும் தேர்தல் அறிக்கையை விட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை முற்றிலும் வித்தியாசமாக அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் அனைத்து அம்சங்களும் உடனே நிறைவேற்றப்படும் என்று மக்கள் தீராத நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எப்போதுமே காப்பாற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.