Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


இதில் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இதில், காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குப்பதிவாகி இருந்தது. தற்போதைய நிலவரப்படி அதாவது 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 


காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம் 


வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி வரையில் 10.10% வாக்குபதிவாகியுள்ளது.  அதாவது மொத்தமுள்ள 2,27,547 வாக்காளர்களில்  22,973 பேர் வாக்கு செலுத்தினர். 


காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்


32, 562 ஆண்களும், 30, 907 பெண்களும் வாக்களித்துள்ளனர். இதையடுத்து மொத்தம் 63,469 பேர் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.  இது மொத்த வாக்காளர்களில் 27.89% ஆகும். 


பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறியப்பட்டுள்ள  32 வாக்குச்சாவடிகளில்  மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் முடிவு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் கவனமும் ஈரோடு கிழக்கு தொகுதியின் மீது குவிந்துள்ளது. 


வாக்காளர்களுக்கு பணம்? 


ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், கொலுசு, புடவை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. களமிறங்கிய அரசியல் கட்சியில் ஆளும் கட்சியும் , எதிர் கட்சியுமான திமுக, அதிமுக தரப்பில் வாக்காளர்களை மண்டபத்தில் தங்க வைத்து அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதேபோல், கட்சியினர் வீடுகளையும் வாடகைக்கு எடுத்து அதில் வாக்காளர்களை தங்கவைத்து அவர்களுக்கு உணவு மற்றும் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 


ஈரோடு கிழக்கில் உள்ள கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலையே வாக்களித்தார். வாக்களித்த பின் பேட்டியளித்த அவர்,” ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 80 சதவீத மக்கள் கை சின்னத்திற்கு வாக்களித்து முதலமைச்சர் ஸ்டாலின் கரத்தை வலப்படுத்துவார்கள். முதலமைச்சரின் 20 மாத கால ஆட்சிக்கும், ராகுல்காந்தியின் நடை பயணத்திற்கும் ஆதரவு அளிக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் இருக்கும் என அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து,  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் இருக்கும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக எனது பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே திமுக கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. எதிர் அணியினர் இதுவரை சந்திக்காத தோல்வியை  இந்த இடைத் தேர்தலில் சந்திப்பார்கள்.  கட்சி பேதமின்றி தேர்தல் ஆணையம் அனுமதி இல்லாத அலுவலகங்களை மூடியது. இந்த தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுகிறது” என கூறினார்.