ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக ஏ. எம். சிவப்பிரசாந்த போட்டிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் உடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
டி.டி.வி தினகரன் செய்தியாளர் சந்திப்பு
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் 29 வயது இளைஞர் எ.எம். சிவபிரசாந்த குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் பெருமாள் சண்முகவேல் தலைமையில் 294 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்தில் முழ வீச்சில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவது, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, உங்க கூட்டணி கட்சிகளுக்கு எதிராகவும் இந்த ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க உள்ளதாக தெரிவித்த அவர் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வது பண பலத்தை விட மக்கள் பலம் தான் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சின்னத்தையும், கட்சியையும், அதன் கொள்கைளையும் சுயநலத்திற்காக, பதவி வெறி பிடித்து கட்சியின் சட்ட விதிகளுக்கு மாறாக அதிமுகவில் உள்ளவர்கள் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால் கூட்டணி நலன், எதிர்கால மக்கள் நலன் கருதி அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்து விட்டது. ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளார்.