Erode East Bypoll: மாலை 6 மணிக்கு வாக்குச் சாவடிக்குள் வரும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 


டோக்கன்:


காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மதியம் 1 மணி நிலவரப்படி, 44.58 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மேலும் இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை விடவும் இம்முறை அதிக வாக்குப்பதிவு இருக்கும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும், மாலை 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் வரும் வாக்காளர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு நடத்தப்படும் எனவும் ஈரோடு கிழக்கு தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


 


மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகிறார்கள். வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது  அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மக்கள் ஆர்வமாக வந்து வாக்களிக்க வேண்டும். காவல்துறை பாதுகாப்பு தேவைக்கு ஏற்ப போடப்பட்டுள்ளது. வெளியூர் நபர்கள் இருப்பதை குறிப்பிட்டு சொன்னால், வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.


இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்தால் கை சின்னத்தில் விழுவதாக எழுந்த புகார் தொடர்பாக கேள்விக்கு, வாக்குப்பதிவு இயந்திரம் 100 சதவீதம் நம்பகத்தன்மை உடையது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் ஒருவர் புகார் அளித்தால் தேர்தல் அதிகாரி சரி பார்த்து புகார் பொய் என்றால், புகாரளித்த அந்த நபர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார். உண்மையாக தவறு இருந்தால் வழிமுறை படி தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். தேர்தலுக்கு பயன்படுத்தும் மை தனியாக தயார் செய்து தரப்படுகிறது. மை அழிவதாக புகார் வரவில்லை. அதிகாரிகள் சரியாக மை வைக்கிறார்கள் அதேபோல், வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வீரப்பன் சத்திரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக சிறிது நேரம் அங்கு வாக்குப்பதிவானது நிறுத்தி வைக்கப்பட்டது.பத்து நிமிடத்தில் இயந்திரத்தின் கோளாறு சரி செய்யப்பட்டதால் மீண்டும் வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் வீரப்பன் சத்திரம் வாக்கு சாவடியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.