தமிழ்நாட்டில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பனை வகைகள் காணப்படுகின்றன என தாவரவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகளவில் பனைமரங்கள் காணப்படுகின்றன. திருவள்ளூர், சேலம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. ஒரு பனை மரத்தில் இருந்து ஆண்டுக்கு 180 லிட்டர் பதநீர், 25 கிலோ கருப்பட்டி, 10 கிலோ விறகு, 20 கிலோ பனைநார், 6 பனைஓலை பாய்கள், 2 கூடைகள் ஆகியவற்றை நாம் பெறலாம். இன்னும் மதிப்புக்கூட்டினால் அதிக பொருட்களைப் பெறலாம். நுங்கு, பதநீர், பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, கருப்பட்டி, பனங்கற்கண்டு, கள்ளு, பனை நார், பனங்குருத்து என எண்ணற்ற பொருட்கள் பனைமரத்தில் இருந்து கிடைக்கின்றன.




தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், குளத்ததூர், விளாத்திகுளம் பகுதி பெரியசாமிபுரம், சித்தவ நாயக்கன்பட்டி, வேடப்பட்டி, அயன்வடலாபுரம், தாப்பாத்தி, கருப்பூர் போன்ற ஆற்றுப்படுகையோர கிராமங்கள், குறுமண் பாங்கான நிலங்கள் நிறைந்த பகுதிகளில் பனைத்தொழில் நடைபெற்று வருகிறது. இத்தொழிலின் பதநீர் காலம் மாசி மாதம் முதல் ஆடி மாதம் கடைசிவரையாகும். தற்போது கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தொழில் துவங்கியுள்ளது.இந்தாண்டு போதிய மழை பெய்யாததால் பாளை வருவதில் தாமதமானது.




தினந்தோறும் காலை, மதியம், மாலை என மூன்று வேளை பனைமரத்தின் உச்சிமீது ஏறி பக்கவாட்டில் உள்ள பாளையை மிருதுவாக சீவிவிடுவார்கள். அதில் உள்ள ஈரப்பதம் சுரந்து சொட்டு சொட்டாக மட்டையில் கட்டப்பட்டிருக்கும் பானை போன்ற வடிவமுள்ள களையத்தில் வடியும், இதுவே பதநீர் ஆகும். அக்களையத்திற்குள் சுண்ணாம்பு தடவினால் பதநீராகிறது. சுண்ணாம்பு தடவாமல் விட்டால் அதுவே கள் ஆகும். இது ஒருவகையான போதை பானம் என கூறப்படுகிறது.




அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பனை ஏறஆரம்பித்து விடுவார்கள்.இது கடினமான தொழிலாகும். ஆறு மாதம் மட்டுமே செய்யப்படும் தொழில் என்பதால் மீதமுள்ள காலம் மாற்றுத் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. பனைமரத்தில் அடிமுதல் நுனி வரை அனைத்தும் பயன்தரக்கூடியதாகும். கடந்தாண்டு சீசனில் கிலோ பனங்கருப்பட்டி ரூ 300 வரை விற்பனையானது. தவிர தினமும் சுமார் 35 அடி உயரம் வரை உள்ள பனைமரத்தின் உச்சிவரை பனையேறிபாளை சீவ ஒருவர் 50 பனைகள் வரை மூன்று முறை ஏறி இறங்குவதற்குள் உடம்பு சோர்வடைந்துவிடும். இதனால் கடந்தகாலங்களில் தொழில் செய்த பலர் இத்தொழிலின் சிரமம் கருதி அவர்களது சந்ததியினரை மாற்றுத் தொழிலுக்கு அனுப்பிவிட்டனர். இந்நிலையில் எஞ்சியுள்ள சில குடும்பங்களே தொழில் செய்கின்றனர்.




இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, பதநீர் சீசன் முறையாக துவங்காத நிலையில் காவல்துறையினர் பனையேறிகளிடம் பணம் கேட்டும், பதநீர் கேட்டும், கருப்பட்டி கேட்டும் தொந்தரவு செய்கின்றனர். காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நாட்கணக்கில் காக்க வைக்கின்றனர். தினம் ஒன்றுக்கு ஒரு முறை பாளை சீவவில்லையென்றால் உலர்ந்துவிடும். அதில் பானம் சுரக்காது. கேட்டதை தராவிட்டால் கள் விற்பதாக வழக்கு போடுவோம் மிரட்டுகின்றனர். ஏற்கனவே இத் தொழிலை விட்டு பல குடும்பங்கள் திசைமாறி சென்றுவிட்டனர். மீதமுள்ள ஒரு சில குடும்பங்களையும் காவல்துறை மிரட்டுவதால் தொழில் செய்து சம்பளத்திற்கு கூட கட்டுபடியாகாத நிலையில் காவல்துறை கெடுபிடியால் இன்னும் பலர் பனைத்தொழிலுக்கு வர அச்சப்படுகின்றனர். தவிர பனைத்தொழில் ஆண்டுக்காண்டு நலிவடைந்து வருகிறது.




பனைத்தொழிலை பாதுகாக்கவும், கோடிக்கணக்கான பனைவிதைகளை நடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தவிர இன்னும் பல தொழிலாளர்கள் பனைத்தொழில் நல வாரியத்தில் உறுப்பினராக இல்லை. நலவாரியத்தில் செயல்படுத்தப்படும் நல திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தவிர பனைத்தொழில் செய்வோருக்கு கருப்பட்டி, கற்கண்டு, சில்லுக்கருப்பட்டி தயாரிப்பு செய்ய அரசு மானியத்துடன் கடனுதவி செய்வதாக தெரிவித்துள்ளது. அது விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிக்கு உட்பட்டிருக்கவேண்டும் என கூறுகின்றனர்.


இதனால் புதூர் வட்டார பனைத்தொழில் புரிவோர் பயனடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஒருபுறம் பனைமரம் வளர்ப்பு, மறுபுறம் பனைத் தொழிலை அழிக்கும் அதிகாரிகள், தமிழர்கள் பண்பாடு, கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் காவல் துறை அதிகாரிகள் இத்தொழில்புரியும் குடும்பங்களை நிம்மதியாக தொழில் செய்யவிட வேண்டும். பனைத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.