கடந்த 2016ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் உரியில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 18 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ற பதில் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது.


இதையடுத்து, 2019ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்பு வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 


இந்த தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த தாக்குதல் நடந்த ஒரு சில நாள்களிலேயே, பாகிஸ்தான் எல்லை பகுதியான பாலகோட்டில் இந்தியா வான்படை தாக்குதலை மேற்கொண்டது. 


இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தொடர் கேள்விகளை எழுப்பி வந்தது. ஆனால், ராணுவத்தை காங்கிரஸ் சந்தேகப்படுவதாக பாஜக குற்றம்சாட்டியதை அடுத்து, இது தொடர்பான விவகாரத்தில் விமர்சனம் மேற்கொள்வதை காங்கிரஸ் தவிர்த்து வந்தது.


இந்நிலையில், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தொடுத்ததற்கான ஆதாரத்தை மத்திய அரசு வெளியிடவில்லை என விமர்சித்துள்ளார். மேலும், அரசு பொய்களை பரப்பி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.


ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு மத்தியில் பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர், "புல்வாமா பயங்கரவாதத்தின் மையமாக உள்ளது. மேலும் ஒவ்வொரு வாகனமும் சோதனை செய்யப்படுகிறது. ஒரு ஸ்கார்பியோ கார் தவறான பாதையில் இருந்து வந்தது.


அதை, ஏன் சோதனை செய்யவில்லை? அப்போது ஒரு மோதல் ஏற்பட்டு நமது ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து இன்றுவரை அரசாங்கம் நாடாளுமன்றத்திலோ அல்லது பொது வெளியிலோ தகவல் தெரிவிக்கவில்லை.


அவர்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றிப் பேசுகிறார்கள். இத்தனை பேரைக் கொன்றோம் என்று. ஆனால் ஆதாரம் இல்லை. பொய் மூட்டையை கட்டிக்கொண்டு ஆட்சி செய்கிறார்கள்" என்றார்.


திக்விஜய சிங் தெரிவித்த கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ராணுவத்தை காங்கிரஸ் அவமதிப்பதாக சாடியுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் கருத்தை திக்விஜய சிங் பிரதிபலிக்கவில்லை என அக்கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில், "மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்த கருத்துகள் அவரது சொந்த கருத்துகள். காங்கிரஸின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை.


சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2014க்கு முன்பு ஐக்கிய முற்போக்கு அரசால் நடத்தப்பட்டது. தேசிய நலனுக்கான அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் காங்கிரஸ் ஆதரித்துள்ளது தொடர்ந்து ஆதரிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.