ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது பவானிசாகர் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்துள்ளது. இதில், பவானிசாகர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் 4வது வார்டிலே பா.ஜ.க. வேட்பாளராக நரேந்திரன் களமிறங்கினார். அவருக்கு அந்த வார்டில் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பதிவாகியுள்ளது.
நாட்டையே ஆளும் பா.ஜ.க. கட்சியின் வேட்பாளருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டும் பதிவாகி இருப்பது அந்த பகுதியில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகளுக்கும், பா.ஜ.க.வினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பா.ஜ.க. வேட்பாளர் நரேந்திரனுக்கு அவரது குடும்பத்தினரோ அவரது நண்பர்களோ வாக்களிக்கவில்லை என்பது வாக்காளருக்கு மிகவும் சோகமாகிவிட்டது. இதனால், சமூக வலைதளங்களில் ஒத்த ஓட்டு பா.ஜ.க. என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
கடந்தாண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் போட்டியிட்டார். அவரும் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றார். அப்போதும், ஒத்த ஓட்டு பா.ஜ.க. ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் இதுபோன்ற சோக நிகழ்வு நிகழ்ந்தாலும், கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டாம் 3வது வார்டில் பா.ஜ.க. வேட்பாளர் கோபிநாத், தி.மு.க. வேட்பாளரை விட ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியும், ஒரு ஓட்டு மட்டுமே பெற்று தோல்வியையும் அடைந்துள்ள பா.ஜ.க.வின் நிலை குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும், கருத்துக்களும் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க : TN Urban Election Results 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்