தேர்தல் வழக்கு விபரம்


கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட 370 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாக அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


குறிப்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. எனவே, தபால் வாக்குகளையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார். இதனடிப்படையில் இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு கடந்த ஒரு வாரத்திற்கு முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளது ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டார். இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர், 10 நாட்களில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும். மேலும், வழக்குச் செலவாக 10 ஆயிரம் ரூபாயை வழக்கு தொடர்ந்த செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு தேர்தல் அதிகாரி வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.




தபால் ஓட்டு எண்ணும் பணி:


இந்த நிலையில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தல் அலுவலரும், தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா தலைமையில் சுமார் ஏழு பேர் வாக்குகளை எண்ணி வருகின்றனர். மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி ஒருவர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த செல்வ மோகன் தாஸ் பாண்டியனும் வாக்கு என்னும் இடத்திற்கு வந்துள்ளனர்.


இதைத்தொடர்ந்து தற்காலிகமாக வாக்கு எண்ணும்பணி நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியது. படிவம் 13, 13பி பரிசீலித்து சரிபார்த்த பிறகே 13 சி எனப்படும் ஓட்டு சீட்டுகளை எண்ண வேண்டும் என அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த தேர்தல் வாக்கு விபரம்


தென்காசி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 18 வேட்பாளர்கள்  போட்டியிட்டனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் பழனி நாடார் 89 ஆயிரத்து 315 வாக்குகளும் அதிமுகவின் செல்வ மோகன் தாஸ் 88,945 வாக்குகளும் பெற்றனர். இதனை அடுத்து 370 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை செய்த நீதி அரசர் ஜெயச்சந்திரன் தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை 10 நாட்களுக்குள் எண்ணி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த ஐந்தாம் தேதி தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார். 




இந்த நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கை காலை 10 மணி அளவில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒரு மேஜை கணக்கில், ஏழு பேர் கொண்ட குழு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் எண்ணப்பட்டுள்ள இறுதி வாக்கு எண்ணிக்கை அறிக்கையாக தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் வாயிலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது..


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண