சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அப்பா- மகன் விக்கெட்டை வீழ்த்தியது முதல், ஒரே போட்டியில்  இந்திய வீரர் அஸ்வின் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.


சுருண்ட மேற்கிந்திய தீவுகள்:


மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. டொமினிகாவில் நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய அணி சார்பில், அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதில், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான, சிவ்நரைன் சந்தர்பாலின் மகன் டேகனரைன் சந்தர்பாலின் விக்கெட்டும் அடங்கும்.


அப்பா-மகன் விக்கெட்டை எடுத்த அஸ்வின்:


டேகனரைன் சந்தர்பாலின் விக்கெட்டை வீழ்த்தியது மூலம், இதுவரை எந்த இந்திய வீரரும் நிகழ்த்தாத புதிய சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். அதன்படி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அப்பா மற்றும் மகனின் விக்கெட்டை விழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். முன்னதாக, கடந்த 2011 மற்றும் 2013ம் ஆண்டுகளில், சிவ்நரைன் சந்தர்பாலை, அஸ்வின் அவுட்டாக்கியுள்ளார். அதைதொடர்ந்து, தற்போது அவரது மகனான டேகனரைன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதுவரை எந்தவொரு இந்திய வீரரும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை.


அப்பா - மகன் விக்கெட்டை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்:


இயன் போத்தம் (இங்கிலாந்து) - லான்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ர்ன்ஸ் (நியூசிலாந்து)
வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) - லான்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ர்ன்ஸ் (நியூசிலாந்து)
மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - சிவ்நரைன் மற்றும் டேகனரைன் சந்தர்பால் (மேற்கிந்திய தீவுகள்)
சைமன் ஹார்மர் (தென் ஆப்ரிக்கா) - சிவ்நரைன் மற்றும் டேகனரைன் சந்தர்பால் (மேற்கிந்திய தீவுகள்)
ரவிச்சந்திரன் அஸ்வின் ( இந்தியா ) - சிவ்நரைன் மற்றும் டேகனரைன் சந்தர்பால் (மேற்கிந்திய தீவுகள்)


700 விக்கெட்டுகள் அசத்தல்:


இதனிடையே, இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின். ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் என மொத்தம் 270 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அஸ்வின் மொத்தம் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளும், டி-20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளும் அடங்கும். இந்த பட்டியலில் ஏற்கனவே கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களுடன் அஸ்வினும் இணைந்துள்ளார். 


மற்ற சாதனைகள்:


போல்ட் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற கும்ப்ளேவின் (94) சாதனையை , டேகனரைன் சந்தர்பாலின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் (95) தகர்த்தார். தற்போது விளையாடி வரும் வீரர்களில், அதிகமுறை 5-விக்கெட்ஸ் (33 முறை) எடுத்த வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் தனதாக்கியுள்ளார்.