தமிழ் சினிமாவில் குடும்ப சென்டிமென்ட் படங்களுக்கு என்றுமே ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில்  காதல், ஆக்ஷன், நகைச்சுவை மட்டுமின்றி விவசாயத்தின் முக்கியத்துவம், உடன் பிறப்புகளுடனான பாச பிணைப்பு என அனைத்தின் கலவையாக வெளியான ஒரு கம்ப்ளீட் என்டர்டெயின்மென்ட் திரைப்படம் தான் 'கடைக்குட்டி சிங்கம்'. இப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் தோரணையில் இருந்தாலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடலெடுக்கும் கார்த்திக்கு கிராமத்து கெட்டப் ஒன்றும் புதிதல்ல. அவர் அறிமுக படத்திலேயே ஒரு பக்கா கிராமத்துவாசியாக நடித்த கார்த்திக்கு இப்படத்தில் விவசாயியாக எடுத்த புதிய பரிணாமம் கனகச்சிதமாக பொருந்தியது. 


 



ஆலமரம் போன்ற ஒரு பெரிய குடும்ப தலைவனாக சத்யராஜின் நேர்த்தியான நடிப்பு. குடும்பத்துடன் சேர்ந்து ஒரு குரூப் போட்டோ எடுக்க வேண்டும் என்ற அவரின் கனவே இப்படத்தின் அஸ்திவாரமாக இருந்தது. முதல் தாரத்துக்கு ஆண் குழந்தை இல்லை என்பதால் மச்சினிச்சியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்க முதல் தரத்துக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. ஐந்து அக்காளுக்கு ஒரே தம்பியாக பார்த்து பார்த்து செய்யும் பாசக்கார சகோதரனாக கார்த்தி. நகைச்சுவைக்காக சூரி, அப்பப்போ வந்து போகும் நாயகியாக சாயீஷா, முறைப்பெண்களாக பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு, அம்மா விஜி சந்திரசேகர், சித்தியாக பானுப்ரியா இப்படி ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் சிறப்பாகவே அமைந்து இருந்தது.


உறவுகளுக்குள் இருக்கும் சந்தோஷம், எதிர்பார்ப்பு, சங்கடங்கள், சமாளிப்பு இப்படி குறை நிறைகளை தாண்டியது தான் ரத்த பந்தம் என உறவின் உன்னதத்தை ஒரு படைப்பாக கொடுத்த படம் தான் கடைக்குட்டி சிங்கம். அத்தனை சிக்கல்களையும் தாண்டி குடும்பமா அல்லது காதலியா என வரும்போது காதலிக்காக குடும்பத்தை விட்டுக்கொடுக்காமல் மெனெக்கெட்டு நடித்த கார்த்தியின் நடிப்பை பாராட்டியே ஆகவேண்டும். இறுதியாக ஹீரோ ஹீரோயின் கரம் பிடிக்கிறார்களா என்பதுதான் கிளைமாக்ஸ். கிளைமாக்ஸ் காட்சியில் ஊமையாக இருந்த போதும் தம்பிக்காக துடித்த அக்காவின் பரிதவிப்பும், கார்த்தியின் வசனங்களும் கல்லையும் கரைத்துவிடும் நிதர்சனம். 



அங்கங்கே வந்த விவசாயம் பற்றின கருத்துக்கள் ஆணிவேராக பதிந்தன. கண்ணுக்கினியாள், பெருநாழி குணசிங்கம், பூம்பொழில், செல்லம்மா இப்படி தமிழ் பெயர்களை கதாபாத்திரங்களின் பெயர்களாக சூட்டி படத்தில் மேலும் ஒரு புதுமையை புகுத்தி இருந்தார் இயக்குநர் பாண்டிராஜ். 


உறவுகளுக்கு இடையே இருக்கும் பாசம், கோபம், எதிர்பார்ப்பு, எதார்த்தம் என உறவுகளின் உன்னதத்தை போற்றிய இப்படம் காலங்களை கடந்தும் பேசப்படும்.