தமிழ்நாட்டில் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி வரை பரப்புரை மேற்கொள்ளலாம். வழக்கமாக பிரச்சாரம் மாலை 5 மணியுடன் ஓயும் நிலையில் கோடைக்காலம் என்பதால் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். 19ம் தேதி விடுமுறை இல்லை எனத் தெரிந்தால் 18ம் தேதியே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம். வருகின்ற 17ம் தேதி பிரச்சாரம் செய்ய கடைசி நாள் என்பதால் மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடையவுள்ளது.” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “92.80 சதவீதம் பூத் சிலிப் வழங்கபட்டுள்ளது, மீதமுள்ளவர்களுக்கு இன்று பூத் சிலிப் வழங்கப்படும். தபால் வாக்கு நாளையுடன் நிறைவடைகிறது. வாக்கு பதிவு அன்று காட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலதுறை ஆணையர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும். பார்வை திறன் குறைபாடு உள்ள வாக்காளர்களுக்கு பிரெய்லி முறையில் வாக்கு பதிவு இயந்திரத்தில் இடம் பெற்று உள்ளது
17 ம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. அதற்கு பிறகு பிரச்சாரம் செய்ய அனுமதிக்க முடியாது. ஒரு தொகுதியில் தேர்தலை நிறுத்த - இ வி எம் கோளாறு, ஆர் ஒ, டி இ ஒ மற்றும் பார்வையாளர் ஆகியோரின் பரிந்துரைகளின் பெயரில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.18 ம் தேதி மாலைக்குள் வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு பதிவு மையத்திற்கு கொண்டு செல்லப்படும். ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு 20 விழுக்காடு கூடுதலாக வாக்கு பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.” என்றார்
இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
ஏப்ரல் 1ம் தேதி முதல் 13 ம் தேதி வரை தமிழகத்தில் 460 போடி மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள், நகை மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 293 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் மற்றும் 53 கோடி அளவுக்கு ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 லட்சம் லிட்டர் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.