நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் முதற்கட்டமாக 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், ராஜஸ்தானில் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி மதரீதியாக பேசியது பெரும் சர்ச்சையை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.


கருத்து கூற முடியாது:


அவரது பேச்சில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் செல்வத்தை இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்று பேசியதுடன் பெரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.


இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் எந்த கருத்தையும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளது.  அரசியல் கட்சிகள் பிரதமர் மோடியின் வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வரும் சூழலில், தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக எந்த கருத்தையும் கூற முடியாதது என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


மோடியின் சர்ச்சை பேச்சு:


பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிராக பிரதமர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் அளித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாராவில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்றார்கள்.


இதன் பொருள் அவர்கள் இந்த செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?


பெண்கள் வைத்துள்ள தங்கத்தை கணக்கிட்டு அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக் கூட இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை விட்டு வைக்காது.“


இவ்வாறு அவர் பேசினார்.


மதச்சார்பற்ற நாடாக உலக நாடுகள் பார்வையில் கருதப்படும் இந்தியாவின் பிரதமர் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது உலக நாடுகளின் கவனத்தையும் திருப்பியுள்ளது. பிரதமரின் பேசுபொருள் தற்போது மக்களவைத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.