4 State Election 2024: அடுத்த 6 மாதங்களுக்குள் எந்தெந்த மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


6 மாதங்களில் 4 முக்கிய தேர்தல்:


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்து, மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பான பரபரப்பு முற்றிலும் முடிவதற்கு முன்பே, 3 மாநில & 1 யூனியன் பிரதேச சட்டமன்ற தேர்தல் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய இடங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பல இடங்களில் ஆட்சியை தொடர பாஜக கூட்டணியும், மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர காங்கிரஸ் கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறது.


மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் 2024:


மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள பொதுத்தேர்தல் தான், நடப்பாண்டில் நடைபெற உள்ள மிகப்பெரிய சட்டமன்ற தேர்தலாகும். 288 உறுப்பினர்களை கொண்ட அந்த சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம்  இந்த ஆண்டின் இறுதியில் முடிவடைகிறது. இதனால் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் மீண்டும் அங்கு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக உள்ளார்.  வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணிக்கு, எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி கடும் நெருக்கடி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் காங்கிரஸ், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட, மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 31 தொகுதிகளை எதிர்க்கட்சிகளின் கூட்டணியே கைப்பற்றியது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்த அனுதாப அலை, சட்டமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. நாட்டின் வர்த்தக மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவை கைப்பற்றுவதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.


ஹரியானா சட்டமன்ற தேர்தல் 2024:


90 உறுப்பினர்களை உள்ளடக்கிய தற்போதைய ஹரியான சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், அடுத்த சில மாதங்களிலேயே ஹரியானா சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அங்கு நடைபெற்று வரும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில், நயாப் சிங் சைனி முதலமைச்சராக உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் பாஜக அரசுக்கு எதிரான மனநிலையை கொண்டிருப்பது இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஐந்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் 2024:


81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் மாநில தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம்,  வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால், வரும் நவம்பர் அல்லது டிசம்பரிலேயே மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சாம்பாய் சோரன் அங்கு முதலமைச்சராக உள்ளார். முன்னதாக அந்த பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடைபெற உள்ள 4 மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் ஒரே மாநிலம் இதுதான். அதேநேரம், வரும் தேர்தலில் இங்கு ஆட்சியை கைப்பற்றுவதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் இழுபறி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு உதாரணமாக தான் அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், மாநிலத்தில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் எதிர்க்கட்சியான பாஜக 8 இடங்களை கைப்பற்றியுள்ளது.


ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்: 


கடந்த 2019ம் ஆண்டில் ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, முதன்முறையாக அங்கு நடப்பாண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியானது பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. மெஹ்பூபா முஃப்தி முதலமைச்சராக இருந்தார்.  அண்மையில் அங்கு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முஃப்தி போன்ற முன்னணி தலைவர்களே, சுயேச்சை வேட்பாளர்களிடம் தோல்வியை தழுவினர். இதனால், நடப்பாண்டு தேர்தலில் அங்கு யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது பெரும் குழப்பமாக உள்ளது.