விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முருக்கேரியில் போலீசார் தேர்தல் காரணமாக வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் . அப்போது அந்த வழியே சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு ஈச்சர் வேனை நிறுத்தி சோதனை செய்தனர், அப்போது அதில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அறையில் 60 கேன்களில் தலா 35 லிட்டர் எரிசாராயம் இருப்பதை கண்டுபிடித்தனர். அப்போது போலீசாரை பார்த்தவுடன் அந்த வேனில் இருந்த ஒருவர் கீழே குதித்து தப்பி ஓடிய நிலையில் மற்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை போலீசார் விசாரணை செய்த போது அவர் விக்கிரவாண்டி அடுத்த குமளம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரது மகன் சதீஷ் (27) என்பது தெரிய வந்தது.  இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா திண்டிவனம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள எரிசாராய கேன்களையும், அதனைக்  கடத்தி வர பயன்படுத்தப்பட்ட ஈச்சர் வாகனத்தையும் பார்வையிட்டு குற்றவாளியிடம் விசாரணை நடத்தினார். இந்த எரிசாராயம் ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கடத்தி வரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.



ஆரோவில் வாகன சோதனையில் 6500 மதுபாட்டில்கள் பறிமுதல்:


இதேபோல ஆரோவில் அடுத்த பட்டனூர் அருகே சிறப்பு புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த டாட்டா ஏசி லோடு கேரியர் வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர் சோதனையில் 132 அட்டைபெட்டியில் ரூபாய் 3.5 லட்சம்   மதிப்புள்ள 6,500 மதுபாட்டில்கள் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் விசாரணையில் சென்னையை சேர்ந்த சரவணன் (240 என்பதும் இவர் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்ல படுகிறது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.




சாக்கு மூட்டையில் மது பாட்டில்கள் :


ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தனி தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆட்சிப்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சாக்கு மூட்டையுடன் நின்றிருந்த ஒருவரை பறக்கும் படை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரிக்க முயற்சித்தனர். அதற்குள் அந்தநபர் சாக்கு மூட்டையை அங்கு போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்த சாக்கு மூட்டையை ஆய்வு செய்தபோது, அதில் 32 மது பாட்டில்கள் இருந்தது. விசாரணையில் தப்பி ஓடியவர், ஆட்சிப்பாக்கத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (43) என்பதும், வாக்காளர்களுக்கு வழங்கும் வகையில் மதுபாட்டில்கள் எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. மதுபாட்டில்களை கைப்பற்றிய அதிகாரிகள், இது குறித்த கிருஷ்ணமூர்த்தி மீது ஒலக்கூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.