நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடுவது குறித்த தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது. அதிமுக 93 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.


திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேசமயம் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் தொடர்பான விபரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.




இதனிடையே கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள 89 வது வார்டை ஒதுக்கியுள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அப்பகுதி திமுகவினரிடம் ஆதரவு கோரியதாக தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த திமுகவினர், அப்பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 89வது வார்டை ஒதுக்க கூடாது என அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய திமுகவினர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 2006 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் குனியமுத்தூர் பேரூராட்சியாக இருந்ததது. அப்போது திமுக, காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களில் வென்றிருந்த போதும், 4 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் 9 இடங்கள் மட்டுமே வென்ற அதிமுகவுடன் ரகசிய கூட்டணி அமைத்து, பேரூராட்சி தலைவர் பதவியை காவு கொடுத்தது.


தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்படும் அப்பகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகியான முருகேசனுக்கு வார்டை ஒதுக்கக் கூடாது. எனவே தான் வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னதாகவே ஆர்பாட்டம் நடத்துகிறோம்” எனத் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதை கண்டித்து, திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி தேர்தலில் வார்டு பங்கீடு முடிவடையும் முன்பாகவே திமுக கூட்டணியில் முரண்பாடு எழுந்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண