கடந்த சனிக்கிழமை இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலுக்கான தேதியை வெளியிட்டது. அதன் அடிப்படையில், இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ம் தேதியே முதல் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதால் திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க தீவிரமான பணியில் ஈடுபட்டு வருகின்றன. 


மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி வருகின்ற 27ம் தேதி நடக்கிறது. மத்தியில் பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுக்கு இடையே நேரடியாக மோதல் இருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த திமுக: 


மக்களவை தேர்தலுக்கான வேலைகளில் திமுக கட்சி மட்டும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்துள்ளது. நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் நிலையில் அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி குறித்து இன்று வரை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், திமுக கட்சிக்கு மக்கள் விடுதலை கட்சி, தமிழ் புலிகள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளனர். 


இந்த சூழலில் திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் தங்களது தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களை வெளியிட்ட நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இன்று தங்களது வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






இன்று தேர்தல் அறிக்கை, வேட்பாளர் வெளியீடு: 


இந்தநிலையில் திமுக மக்களவை தொகுதியில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், தேர்தல் அறிக்கையையும் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார். 


எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிட வாய்ப்பு..? 



  • தூத்துக்குடி - கனிமொழி.

  • தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்

  • மத்திய சென்னை - தயாநிதி மாறன்

  • வட சென்னை - டாக்டர் கலாநிதி வீராசாமி

  • வேலூர் - கதிர் ஆனந்த்

  • நீலகிரி - ஆ.ராசா

  • கள்ளக்குறிச்சி - கவுதம சிகாமணி

  • ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு

  • காஞ்சிபுரம் - ஜி.செல்வம்

  • அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

  • திருவண்ணாமலை - அண்ணாதுரை

  • பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்

  • சேலம் - பி.கே.பாபு

  • கோயம்புத்தூர் - மகேந்திரன்

  • தஞ்சாவூர் - எஸ்.எஸ். பழனி மாணிக்கம்

  • தர்மபுரி - டாக்டர் செந்தில்

  • தென்காசி - தனுஷ்

  • பெரம்பலூர் - அருண்


இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 


மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை இன்று வெளியாக உள்ள நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ”திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.