புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி சிபிஐக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், திமுக உறுப்பினர் வேட்புமனு தாக்கல் செய்தததால் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.
கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 15 வார்டுகளுக்கான தேர்தலில் திமுக - 12, சிபிஐ - 1, பிஜேபி - 1, சுயேட்சை 1 வெற்றி பெற்றனர். இதில் தலைவர் பதவி ஆதி திராவிடர் பெண்ணிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இன்று நடைபெற்ற தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் காலை நடைபெற்றது. இதில் சுயேட்சை வேட்பாளரை தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி, முன்மொழிபவர் ஒருவரும், அதை வழிமொழிபவர் ஒருவரும் இல்லாத நிலையில் வேட்புமனு பெறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் திமுக உறுப்பினர்கள் 12 பேரில் 3வது வார்டில் வெற்றி பெற்ற புவனேஷ்வரி தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். இதனை அடுத்து அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனுவினை தாக்கல் செய்யாததால் அவர் வெற்றி பெற்றதாக செயல் அலுவலர் பாலசுப்ரமணி அறிவித்தார். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் திமுகவை சார்ந்த உறுப்பினர் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ரத்தினம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில் -புலியூர் பேரூராட்சி மறைமுக தலைவர் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுகவினர் தாங்களாகவே ஒருவரை நிறுத்தி வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த இடத்தில் நாங்கள் போட்டியிடவில்லை. இதனால் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
புலியூர் பேரூராட்சியில் கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் திமுக வேட்பாளர் மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டது உள்ளூர் அமைச்சருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. எனவே, கரூர் மாவட்டத்தில் கூட்டணிக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும், கூட்டணி விரோத போக்கை கண்டித்தும், கூட்டணி தர்மத்தை மீறியது குறித்து எங்கள் கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளோம். கட்சித் தலைமை எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என தெரிவித்தார். புலியூர் பேரூராட்சியில் தலைவர் பதவியை கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்காமல் புலியூர் பேரூராட்சியில் மற்ற வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த அவரை வெற்றி பெறச் செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு.