நாடு முழுவதும் சிலிண்டர் விலை ரூ.500 ஆகக் குறைக்கப்படும், பெட்ரோல் விலை ரூ.75 ஆகக் குறைக்கப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாகவே தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.


இதற்கிடையே தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்துக் களம் காண்கிறது.


திமுக கூட்டணியில் எந்தக் கட்சிகள்?


திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 


திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் தவிர, இதர கட்சிகளுக்கு, மக்களவைக்கான தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, மாநிலங்களவை ஒரு தொகுதி ஒதுக்கப்பட உள்ளது.


யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?


திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 19 தொகுதிகள் போக, மீதமுள்ள 21 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. 


முன்னதாக திமுக தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டது.


டாப் 10 அம்சங்கள்


* நாடு முழுவதும் சிலிண்டர் விலை ரூ.500 ஆகக் குறைக்கப்படும்.


* பெட்ரோல் விலை ரூ.75 ஆகக் குறைக்கப்படும். டீசல் விலை ரூ.65 ஆகக் குறைக்கப்படும்.


* நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்படும்.


* இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.


* மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். அவர்களுக்கு வட்டியில்லாமல் கல்விக் கடனாக ரூ.4 லட்சம் வழங்கப்படும்.


* நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவை ரத்து செய்யப்படும். 


* மத்திய அரசு பணிகளில் தேர்வு, நேர்முக தேர்வு உள்ளிட்டவை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படும்.


* நாடு முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவு செய்யப்படும்.  


* உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும். 


* மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் வை- ஃபை வசதி ஏற்படுத்தப்படும். 


இவ்வாறு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.