அருண் நேரு பற்றி தகவல்..


தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர், திமுக  முதன்மை செயலாளருமான கே.என்.நேரு - சாந்தா இவர்களின் மகன் அருண் நேரு வயது ( 40) ஆவார். இவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர்.  அருண் நேரு  M.S (Construction Management) OPM, Harvard University படித்துள்ளார். பின்பு விவசாயம் மற்றும் அரிசி ஆலை நிர்வாகத்தை கவனத்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தீபிகா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.


இந்நிலையில் இவர் கடந்த 5 ஆண்டு காலமாக இவருடைய தந்தையோடு இணைந்து கட்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அமைச்சர் செல்ல முடியாத நிகழ்ச்சிகளில் இவர் நேரடியாக கலந்து கொண்டு கட்சி பணியாக இருந்தாலும், தொண்டர்கள் வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் இவர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்துள்ளார்.


மேலும், கே.என்.நேரு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அவருடைய தொழில்களையும் இவர் கவனித்து வந்துள்ளார். அதேபோல் அரசு சார்ந்த மேம்பாட்டு பணிக்கான ஒப்பந்தங்களையும் பிரித்துக் கொடுக்கும் பணியையும் மேற்கொண்டுள்ளார்.




அருண் நேரு அரசியலுக்கு வருகை..


கடந்த 5 ஆண்டுகளாக திமுக கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசியல் நிகழ்வாக இருந்தாலும் பல நிகழ்ச்சிகளில் அருண் நேரு கலந்து கொண்டார். குறிப்பாக அருண் நேரு அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் அமைச்சர் கே.என்.நேருக்கு துளி கூட விருப்பம் இல்லை என கூறப்பட்டது. ஆனால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்ததின் அடிப்படையில் அருண் நேரு, கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்வுகளையும் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக திமுக சார்ந்த நிகழ்ச்சிகளின் போஸ்டர்கள், பேனர்களில் அமைச்சர் நேருக்கு அடுத்தபடியாக அருண் நேருவின் புகைப்படம் இடம்பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது.


கடந்த ஆண்டு முசிறியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் அருண் நேரு அரசியலுக்கு வர வேண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அமைச்சர் நேருவின் ஆதரவாளர், சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பொது மேடையில் தனது விருப்பத்தை தெரிவித்தார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் நேரு மௌனமாக இருந்ததால், அவர் சம்மதம் சொல்லிவிட்டார் என திமுகவினர் எடுத்துக் கொண்டு அடுத்த கட்ட பணியை தொடங்கினார். 




குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருண் நேருவின் பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள், பேனர்கள் வைக்கபட்டது. அதில் திருச்சி மாநகரில் வைக்கபட்ட பேனரில் வருஙகால பாராளுமன்ற நாயகரே, வருஙகால MP அருண் நேரு என எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அருண் நேரு MP தேர்தலில் போட்டியிட உள்ளானர் தெரியவந்தது. ஆகையால் அருண் நேரு அவர்கள் கடந்த சில மாதங்களாக தனது தீவிர அரசியல் பயணத்தை தொடங்கினார். மக்களை சந்தித்து குறைகளை கேட்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, இளைஞர்களின் விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைப்பது, போன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு பிரபலமான முகமாக திகழ்ந்தார். 




இந்நிலையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தமிழக முதல்வர், திமுக கழக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான அருண் நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


பெரம்பலூர் தொகுதியை தேர்தெடுக்கப்பட்டதற்கு காரணம். 


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரம்பலூர், முசிறி, துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைச்சர் கே.என்.நேருவிற்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது. அந்த பகுதிகளை தனது கோட்டையாக மாற்றி வைத்துள்ளார். ஆகையால் அருண் நேரு எந்த சிரமம் இல்லாமல் எளிதாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என திமுக வட்டாரங்கள் தகவல் கூறுகிறார்கள்.