விழுப்புரம் : அதிமுகவிற்கும் பாமகவிற்கும் பொது எதிரி திமுக தான் ; அதிமுக தொண்டர்கள் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் .


அப்போது அவர் கூறுகையில்... விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுகின்ற இடைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விடும் என்ற பயத்தில் பல்வேறு பிரச்சனைகளில் ஈடுபட்டு திமுக வருகின்றது.  குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது  பொதுமக்களை அங்குள்ள திமுகவினர் அடைத்து வைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு பெற விடாமல்  தடுத்தனர். இது போன்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என்றால் 100 நாள் வேலை திட்டத்தில் உங்களை சேர்க்க மாட்டோம் என்று மிரட்டி வருவதோடு, அங்குள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தேர்தல் பணியாற்றினால் வருகின்ற காலங்களில் உங்களது பஞ்சாயத்திற்கு பணம் ஒதுக்க மாட்டோம் என்றும் அச்சுறுத்தி வருகின்றனர். இவற்றையெல்லாம் பார்க்கும் போது பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் என்ற அச்சத்தில் திமுகவினர் கட்டவிழ்த்து  விடப்பட்டு, அங்குள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.


மேலும் பொதுமக்கள் திமுகவினர்  மீது கடும் கோபத்தில் உள்ளனர். குறிப்பாக கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள், முழு மதுவிலக்கு அளிக்காதது மற்றும் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தாதது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்காக பொதுமக்கள் திமுகவின் மீது கடும் கோபத்தில் உள்ளதால் இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயமாக வெற்றி பெறுவது உறுதி என்று கூறிய டாக்டர் ராமதாஸ் விக்கிரவாண்டியில் போட்டியிடுகின்ற பாமக வேட்பாளர் அன்புமணி நாற்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறினார்.


மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்  திமுகவை தீய சக்திகள் என்றே குறிப்பிடுவார்கள். எனவே அதிமுகவினர் தங்களது வாக்குகளை வீணாக்காமல் நமது பொது எதிரியான திமுக வேட்பாளருக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தவறினால் பதவி விலக வேண்டும் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் பலியான நிலையில் சமீபத்தில் அதன் அருகில் உள்ள குமார மங்கலத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஜெயராமன் என்பவர் பலியான நிலையில், இரண்டு பேர் அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றையெல்லாம் பார்க்கும் போது, கள்ளச்சாராயத்தை தடுப்பதில் போலீசாரும், தமிழக அரசும் படுதோல்வி அடைந்துள்ளது . எனவே தமிழக அரசு பொதுமக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 


இட ஒதுக்கீடு திமுக போட்ட பிச்சை என்றும் அதனால் நாய்கள் கூட பிஏ பட்டம் பெற்றுள்ளது என்று கூறியுள்ள ஆர்.எஸ் பாரதிக்கு வன்மையாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டிக்கின்றோம் என்று கூறினார்.


மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் மின்சார கட்டணம் உயர்வு வரப்போகிறது இதனால் வணிக நிறுவனங்கள் பொதுமக்களும் அனைவரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும். மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட வேண்டும் என்றும் தமிழகத்தில் தமிழ் மொழியை கட்டாய மொழியாக கொண்டு வருவது வரவேற்கத்தக்கது என்றும் மேலும் மருத்துவ படிப்பில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளது நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து அனைவரும் ஆதரவு தருவது மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் மத்திய அரசின் நீட் தேர்வை நீக்க வேண்டும், தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி நீட் தேர்வு விவகாரத்தில் பொதுமக்களுக்கு துரோகம் செய்து முதல்வர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் நீட் என்ற சொல் இனி இந்தியாவில் இருக்கக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.


காமராஜர் பல்கலைக்கழகம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு கூட நிதி இல்லாமல் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய பல்கலைக்கழகமாக இயங்கி வரக்கூடிய பல்கலைக்கழகத்திற்கு அரசு அதற்கான நிதியை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி தற்போது வரை நிரப்பப்படாமல் இருப்பதை உடனடியாக நிரப்ப வேண்டும்.