Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.


முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு:


இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “சாதனைகளால் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் திமுகவின் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திரு. அன்னியூர் சிவா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!” என கோரிக்கை விடுத்துள்ளார்.






வாக்காளர்களுக்கு கோரிக்கை:


சுமார் நான்கு நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காணொலியில் பேசியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ”விக்கிரவாண்டி இடைதேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். மக்களோடு மக்களாக மக்கள் பணியாற்றும் தொண்டர்தான் அன்னியூர் சிவா. கலைஞர் உடன்பிறப்புகளில் அன்னியூர் சிவாவும் ஒருவர். திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர், இந்த மாதம் கூடுதலாக 1.48 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை பெற உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதிக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தது திமுக ஆட்சி. பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டை அதிகரித்த ஆட்சி திமுக ஆட்சி. 1987ல்  நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர் நீத்த சமூகநீதி போராளிகளுக்கு நினைவகம் கட்டி வருகிறோம். விழுப்புரத்தில் கட்டப்பட்டு வரும் அந்த நினைவகத்தை விரைவில் திறந்து வைக்க உள்ளேன். பாஜக கூட்டணியை தோற்கடிப்பதன் மூலம் சமூக நீதிக்கு துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.


விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்:


கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர்  உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த தொகுதியில் வரும் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, பதிவான வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. 


இடைதேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பில் பாமகவின் சி. அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதையடுத்து அங்கு தேர்தல் பரப்புர்ரையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.