சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி மற்றும் 31 பேரூராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மன்றத் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுக வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. 



நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சியில் திமுக கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்றது, அதிமுக 7 இடங்களிலும், சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். சுயேச்சையாக வெற்றி பெற்றதில் மூன்று பேர் திமுகவில் இணைந்ததால் மாநகராட்சியில் திமுகவின் பலம் 52 இருந்தது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சியில் திமுக சார்பில் 6 வது வார்டு கவுன்சிலர் ராமச்சந்திரன் திமுக மேயர் வேட்பாளராக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து யாரும் மேயர் வேட்பாளருக்கு போட்டியிடாததால், ராமச்சந்திரன் போட்டியின்றி சேலம் மாநகராட்சியின் மேயராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், சேலம் மாநகராட்சியின் துணை மேயர் பதவி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இரண்டு பெண் வேட்பாளர்கள் மட்டுமே சேலம் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றனர். இவர்கள் இருவரில் யாருக்கு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை 7 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாரதா தேவி திமுக கூட்டணி துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். துணை மேயர் பதவிக்கும் போட்டியிட யாரும் முன்வராத நிலையில் சாரதா தேவி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கான வெற்றி பெற்ற சான்றிதழை சேலம் மாநகராட்சியின் ஆணையாளர் கிறிஸ்துராஜ் வழங்கினார். 



சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளிலும் திமுக வேட்பாளர்கள் நகராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேட்டூர், எடப்பாடி, நரசிங்கபுரம், ஆத்தூர் மற்றும் இடங்கணசாலையில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதன்படி இன்று நடைபெற்ற நகராட்சி மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தலில் ஐந்து நகராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றது. தாரமங்கலத்தில் பொருத்தவரை மொத்தமுள்ள இருபத்தி 27 இடங்களில் திமுக 12 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், பாமக 4 இடங்களிலும் மற்றும் சுயேச்சை 7 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனால் தாரமங்கலம் நகராட்சியில் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் ஆதரவுடன் திமுக நகராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


 


சேலம் மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளில் நடைபெற்ற பேரூராட்சி தலைவருக்கான மறைமுக வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர்கள் 26 இடங்களில் வெற்றி பெற்றனர். மல்லூர் பேரூராட்சியில் 7 சுயேச்சை, 5 அதிமுக மற்றும் 3 திமுக கவுன்சிலர்கள் வெற்றி உள்ள நிலையில், பெரும்பான்மை இல்லாததால் சுயேச்சை தலைவர் வேட்பாளர் திமுக ஆதரவுடன் வெற்றி பெற்றார். அதன்பின் வெற்றி பெற்ற சுயேச்சை பேரூராட்சி தலைவர் திமுகவில் இணைந்தார். 4 பேரூராட்சிகளின் தலைவர் தேர்தல் சில காரணங்களுக்காக தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மறைமுக தேடுதலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது.