கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருப்பவர் சேனாதிபதி. இவரது 22 வயது மகள் நிவேதா 97 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்காக போட்டியிடுகிறார். திமுக சார்பில் மேயர் வேட்பாளராக முன் நிறுத்த வாய்ப்புள்ளவர்களில் நிவேதாவும் ஒருவர். இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால், திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் சேனாதிபதி, மகள் நிவேதாவுடன் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்திற்கு திமுகவினருடன் ஊர்வலமாக வந்தார். அப்போது சீட் கிடைக்காத திமுகவினர் திமுக மாவட்ட செயலாளர் சேனாதிபதியை முற்றுகையிட்டனர். அப்போது திமுக பகுதி பொறுப்பாளர் ரமணி, மற்றும் மகளிரணி பொறுப்பாளர் தேவி ஆகியோர் தலைமையில் வந்த திமுகவினர், மாவட்ட செயலாளர் சேனாதிபதிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 




மாநகராட்சிக்கு உட்பட்ட 85 வது வார்டை காங்கிரஸ் கட்சியினருக்கு திமுக மாவட்ட செயலாளர் சேனாதிபதி ஒதுக்கியதாகவும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் அதிமுகவிற்கு ஆதரவானவர் எனக்கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர். திமுகவினர் இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கமிட்டு கொண்ட நிலையில், திமுகவின் ஒரு தரப்பினர் சேனாதிபதியை கண்டித்து தெற்கு மண்டல அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இரு தரப்பினரையும் காவல் துறையினர் சமரசப்படுத்தனர். 


இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி வேட்பு மனுத் தாக்கல் செய்யும் அலுவலகம் முன்பும் ஏராளமான திமுகவினர் குவிந்தனர். அப்போது வெளியில் வந்த பா.ஜ.கவினர் திமுகவினரின் கூட்டத்தை பார்த்து எதிர்ப்பு தெரிவித்து, காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தை தொடர்ந்து திமுகவினரை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். திமுகவினர் இரு தரப்பினரும் மாறி  முழக்கங்கள் எழுப்பியதால் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.




வருகின்ற 19ஆம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக 93 வார்டுகளிலும், அதன் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு வார்டிலும் போட்டியிடுகிறது. திமுக 74 வார்டுகளில் போட்டியிடுகிறது.


திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 வார்டுகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு ஆகியவை காரணமாக அதிருப்தி அடைந்த திமுகவினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.