மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தகவலை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. 


சென்னை தியாகரயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில்  மாநில பொதுச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் கட்சியின் வேட்பாளர்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. 


மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் ஆகிய இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 


பொதுத் தேர்தல் 2024


நாடாளுமன்ற மக்களவையின் பதவிகாலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தல் தேதி அட்டவணை குறித்த அறிவிப்பு நாளை (15.03.2024) மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, பரப்புரை உள்ளிட்டவைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.


மக்களவைத் தேர்தல் உடன் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் அருணாச்சலப் பிரதேசம்,  உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை விவரமும் நாளை (15.03.2024) வெளியாக உள்ளது.


தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் iந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யு.எம்.எல்.), கொங்குநாடு  மக்கள் தேசிய கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைக் கட்சி, காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்டவை I.N.D.I.A. என்று கூட்டணி பெயரில் தேர்தலை சந்திக்கின்றன. 


இதில், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., ஐயுஎம்எல், கொமதேக, ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.  காங்கிரஸ், மதிமுகவுடன் தொகுதி எண்ணிக்கை தெரிந்தாலும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 


 காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தலா 2 தொகுதிகளிலும், வி.சி.க. 2 தொகுதியிலும், ம.தி.மு.க. 1 தொகுதியிலும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.


இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியில்  வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதை எதிர்பார்க்கலாம்.




மேலும் வாசிக்க..


Lok Sabha Election 2024: சிதம்பரம், விழுப்புரத்தில் மீண்டும் வி.சி.க. போட்டி - வெளியானது வேட்பாளர் பட்டியல்?


Lok Sabha Election 2024 Date: மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு- தேர்தல் ஆணையம்