சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் 699 கவுன்சிலர்கள் பதவிக்கு வரும் 19 ஆம் தேதி 1,519 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சேலம் மாநகராட்சியில் 50 சதவீத தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை நிறைவு பெற உள்ள நிலையில். சேலம் மாநகராட்சியின் 60 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள 10 வது கோட்டத்தில் பாண்டியன் தெரு, புத்து மாரியம்மன் கோவில் தெரு, அண்ணா நகர், தாண்டவன் நகர், சக்தி நகர், செங்கல் அணை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியது. இதில் 9,649 வாக்காளர்களை கொண்டது. இந்த நிலையில் 10 வது கோட்டத்தில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஒரே பேர் கொண்டவர்களாக உள்ளனர். திமுக சார்பில் ஆர். சாந்தி, அதிமுக சார்பில் ஆர். சாந்தியும், போட்டிருக்கின்றனர்.


ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்கள் இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் தங்கள் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இரண்டு முக்கிய கட்சிகளை சார்ந்தவர்கள் என்பதால் யாருக்கு வாக்களிப்பது என மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது



இதுகுறித்த திமுக சார்பில் போட்டியிடும் ஆர்.சாந்தி கூறுகையில், பல வருடங்களாக 10வது வார்டில் உள்ளேன். பெயர் ஒன்று போல இருந்தாலும் எனக்கு கழக சின்னமான உதயசூரியன் கிடைத்துள்ளதால் தங்களது வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது. மக்களுக்கு பணியாற்றப் மட்டுமே தேர்தல் களத்தில் இறங்குகிறேன். மக்கள் திமுக வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகின்றனர் என்று கூறினார்.



இதேபோன்று அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்.சாந்தி கூறுகையில், அதிமுக முதலில் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்த்தைகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. அதன் பிறகு இரண்டு நாள் கழித்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக, மக்களை குழப்புவதற்காக மட்டுமே இது போன்ற காரியங்களில் ஈடுபட்டுவருகிறது. சேலம் மக்கள் என்றும் அம்மாவையும், இரட்டை இலை சின்னத்தையும் நினைவில் வைத்துள்ளனர். எனவே நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.



இதேபோன்று சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 வது வார்டில் திமுக சார்பில் வேட்பாளர் G. கனிமொழியும், அதிமுக சார்பில் வேட்பாளராக S. கனிமொழியும் போட்டியிடுகின்றனர். பெயர் ஒன்றாக இருந்தாலும் எங்களுக்கு சின்னமே முக்கியம் என தெரிவிக்கின்றனர் வேட்பாளர்கள்.