நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாட்டிலே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளது. உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதி அமைந்துள்ளது. அமேதி தொகுதியானது இந்திரா காந்தி குடும்பத்தினர் போட்டியிடும் தொகுதியாகவே பார்க்கப்படுகிறது.


அமேதியில் கிஷோரி லால் சர்மா:


இங்கு கடைசியாக நடைபெற்ற சில மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியே போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் ராகுல் காந்தி இங்கு போட்டியிட்டார். அவரை பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிரிதி ராணி வீழ்த்தினார். சோனியா காந்தி முதன் முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால், இந்த முறை அமேதி தொகுதியில் யார் போட்டியிடுவார்? ராகுல் காந்தி மீண்டும் இதே தொகுதியில் களமிறங்குவாரா? என்ற கேள்வி எழுந்தது.


இந்த நிலையில், அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால உறுப்பினர் ஆவார். சோனியா காந்தி குடும்பத்தினருக்கு விசுவாசியாக உள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு அமேதி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. கே.எல்.சர்மா பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தவர்.


யார் இவர்?


அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி மிகுந்த செல்வாக்குடன் இருப்பதற்கு இவரே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 1983ம் ஆண்டு முதல் இவர் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றி வருகிறார். ராஜீவ் காந்தியுடன் நெருக்கமாக இருந்தவர். ராஜீவ்காந்தி மறைவுக்கு பிறகு இந்த தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் பெரியளவில் ஆர்வம் காட்டாத நிலையில் மீண்டும் இந்த தொகுதியில் ராஜீவ் காந்தி குடும்பத்தினரை போட்டியிட வைக்க தீவிரமாக பணியாற்றியவர்.


சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவர். அமேதி மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர். கடந்த தேர்தலில் சோனியா காந்திக்கு பதில் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட்டார். ஆனால், அவர் தோல்வி அடைந்தார்.  அமேதியில் இந்த முறை களமிறங்கும் கிஷோர் லால் சர்மா, பீகார் மற்றும் பஞ்சாப்பிலும் செல்வாக்கு மிகுந்த நபராக உள்ளார்.


இந்த தொகுதியில் 1980ம் ஆண்டு முதல் நேரு குடும்பத்தினர் போட்டியிட்டு வருகின்றனர். 1980ம் ஆண்டு சஞ்சய் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மறைவிற்கு பிறகு, 1981ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை ராஜீவ் காந்தி உறுப்பினராக இருந்தார். 1999ம் ஆண்டு சோனியா காந்தி உறுப்பினராக இருந்தார். 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ராகுல் காந்தி உறுப்பினராக இருந்துள்ளார். 1967ம் ஆண்டு முதல் உருவாகியுள்ள இந்த தொகுதியில் ஜனதா கட்சி ஒரு முறையும், பா.ஜ.க. 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.


அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிக்கு 5ம் கட்ட வாக்குப்பதிவில் வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அமேதி தொகுதியில் இந்த முறையும் ஸ்மிரிதி ராணி போட்டியிடுகிறார். இந்த முறை ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 


மேலும் படிக்க: "பதற்றமா இருக்காரு.. மேடையிலேயே அழ போறாரு" - பிரதமர் மோடியை பங்கமாக கலாய்த்த ராகுல் காந்தி!


மேலும் படிக்க: KCR: 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை.. கே.சி.ஆருக்கு கடிவாளம் போட்ட தேர்தல் ஆணையம்!