நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்கள் களம்கட்டி வருகின்றன. ஏப்ரல் 19 தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.


முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கையைப் போல


இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அண்மையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதுகுறித்து விமர்சித்து இருந்த பிரதமர் மோடி, காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள், முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கையைப் போல் உள்ளன என்று கூறி இருந்தார். ஷகரன்பூர் மற்றும் அஜ்மீர் தேர்தல் பேரணிகளில் மோடி இவ்வாறு பேசி இருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சி, புகார் அளித்துள்ளது.


இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, ’’பிரதமருக்கு எதிராக 2 புகார்கள் உட்பட 6 புகார்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளோம்.






தேர்தல் ஆணையம் தன்னாட்சியை நிரூபிக்க வேண்டிய நேரம் இது


தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான களத்தை உறுதி செய்வதன் மூலம் தனது தன்னாட்சியை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு ஆணையை நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம். இந்த ஆட்சியை அம்பலப்படுத்த எங்கள் பங்கிற்கு அரசியல் மற்றும் சட்டப்பூர்வமான அனைத்து வழிகளையும் மேற்கொள்வோம் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாகவும் சுதந்திரத்துக்கு முந்தைய முஸ்லிம் லீக்கின் கொள்கைகளைத் திணிப்பதாகவும் தனது புகார் கடிதத்தில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.