கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி ஆகியவை உள்ளன. கோவை மக்களவை தொகுதி 1952 ம் ஆண்டு முதல் இதுவரை 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 10,41,349 பேர், பெண் வாக்காளர்கள் 10,64,394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டனர். அதில் திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.


வாக்குப்பதிவு விபரம்


கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குப்பதிவு நாளான்று நகர்ப்புறங்களை விட கிராமப்புற வாக்காளர்கள் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு அதிகரித்து காணப்பட்டது. கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 64.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கோவை வடக்கு தொகுதியில் 58.74 சதவீத வாக்குகளும், கோவை தெற்கு தொகுதியில் 59.25 சதவீத வாக்குகளும், சிங்காநல்லூர் தொகுதியில் 59.33 சதவீத வாக்குகளும், கவுண்டம்பாளையம் தொகுதியில் 66.42 சதவீத வாக்குகளும், பல்லடம் தொகுதியில் 67.42 சதவீத வாக்குகளும், சூலூர் தொகுதியில் 75.33 சதவீத வாக்குகளும் பதிவாகின. மொத்தம், 13 லட்சத்து, 66 ஆயிரத்து, 5978 வாக்காளர்கள் வாக்களித்தனர். இதேபோல 7,239 தபால் ஓட்டுகள் பெறப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.


வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள்


இரண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை அரசினர் தொழிற்நுட்பக் கல்லூரியில் மத்திய பாதுகாப்புப் படையினர், மாநில காவல்துறை அலுவலர்கள் மொத்தம் 93 அலுவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்கள் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைப் பணிக்காக கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் 123 வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்களும், 123 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களும், 127 நுண்பார்வையாளர்களும் என மொத்தம் 373 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 94 வாக்கு எண்ணிக்கை மேசைகளும், 7 தபால் வாக்கு எண்ணிக்கை மேசைகளும் போடப்பட்ட்டுள்ளன. மொத்தம் 194 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளன. பல்லடம், சூலுார் மற்றும் சிங்காநல்லுார் ஆகிய மூன்று தொகுதிகளில் தலா 24 சுற்றுகள், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு தொகுதியில் தலா 22 சுற்றுகள் மற்றும் கோவை தெற்கு தொகுதி தொகுதியில் 18 சுற்றுகளில் ஓட்டுகள் எண்ணப்படும். 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, காலை 8:30 மணிக்கு துவங்கும். வாக்கு எண்ணிக்கை மாலை வரை நடைபெற வாய்ப்புள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் கோவை தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.