நடந்து முடிந்த தேர்தலில் மிஸ் பிகினி இந்தியா 2018ல் வெற்றிபெற்ற அர்ச்சனா கவுதம் படுதோல்வியடைந்திருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா கெளதம். 1995ல் பிறந்த இவர் மாடலிங், விளம்பரப் படங்கள், திரைப்படங்களில் நடித்துவருகிறார். பாலிவுட்டில் வெளியான க்ரேட் க்ராண்ட் மஸ்தி, ஹஸீனா பார்கர், பாரத் கம்பெனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மிஸ் உத்தரபிரதேசம் பட்டத்தை 2014லிலும், மிஸ் பிகினி இந்தியா பட்டம், மிஸ் காஸ்மோ இண்டியா, மிஸ் டேலண்ட் ஆகிய பட்டங்களை 2018லும் வென்றிருக்கிறார். அதோடு மிஸ் பிகினி யுனிவர்ஸ் போட்டிக்காக இந்தியா சார்பில் பங்கேற்றிருக்கிறார். International Institute of Management and Technical Studies மீரட்டில் Bachelor of Journalism and Mass Communication படிப்பை முடித்திருக்கிறார்.
திடீரென அரசியல் ஆசை உருவாக, 2021ல் காங்கிரஸில் இணைந்தார் அர்ச்சனா கெளதம். தற்போது நடந்த உத்தரப் பிரதேசத் தேர்தலில் மீரட்டின் ஹஸ்தினாபூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் ப்ரியங்கா காந்தி. அவருக்கு எதிராக தினேஷ் என்பவரை பாஜகவும், யோகேஷ் வர்மா என்பவரை சமாஜ்வாதி கட்சியும் களமிறக்கியது. ஹஸ்தினாபூர் தொகுதி வேட்பாளராக அர்ச்சனா கெளதம் அறிவிக்கப்பட்டவுடன் எதிர்கட்சியினர் அவரது பழைய பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் உலவ விட்டனர். அதற்கு பதிலளித்த அர்ச்சனா, மாடலின் எனது தொழில். அரசியலையும், தொழிலையும் சேர்த்து பார்க்கக்கூடாது என்றார்.
இந்த நிலையில், நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் 1519 வாக்குகள் மட்டுமே பெற்று அர்ச்சனா கெளதம் படுதோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் 1 லட்சத்து 7 ஆயிரத்து 587 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அர்ச்சனா கெளதம், ஹஸ்தினாபூர் மக்களிடம் அதிக அன்பை பெற்றேன். அவர்களது நம்பிக்கையை மட்டுமே பெறவில்லை. வெகு விரைவில் அவர்களது நம்பிக்கையையும் வெல்வேன். குழந்தை கீழே விழுந்து எழுந்து தான் நடக்கக் கற்றுக்கொள்ளும். கருவில் இருக்கும்போதே யாரும் கற்றுக்கொள்வதில்லை என்று கூறியுள்ளார்.