‛அம்மா... அம்மா.... நீ எங்கே அம்மா...’ என, தனுஷ் பாடினாலும் பாடினார்.... அம்மாவை தேடிக்கொண்டிருந்த பக்தர்களுக்கு மாஸ் தரிசனம் கிடைக்கப் போகிறது. ஆமாம்... மீண்டும் தோன்றுகிறார் அம்மா. ஸாரி... ‛அன்னபூரணி அரசு அம்மா...’. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜனவரி 1 ம் தேதி மாஸ் எண்ட்ரி கொடுத்து, குழந்தைகளை(அவரது பாஸையில்) ஆன்மிக குதூகலம் அளிக்க காத்திருந்தவருக்கு, கடந்த காலத்தில் அவர் பங்கேற்ற ‛சொல்வதெல்லாம் உண்மை’ வீடியோ வெளியாகி, ஓவர் நைட்டில் பேமஸ் ஆனதால், ஒட்டுமொத்த பிளானும் குளோஸ் ஆனது. 


தலைமறைவு, போலீசில் புகார், இணையத்தில் பேட்டி என அதன் பின் பிஸியான அன்னபூரணி அரசு அம்மா, தமிழ்நாட்டையும் பிஸியாக்கினார். ஒரு கட்டத்தில் ‛ச்சீ... இவ்வளவு தானா...’ என முடிவு செய்து, களம் திரும்பி அவர், பேஸ்புக் சொற்பொழிவுகளை வழங்கத் தொடங்கினார். ஆனாலும், அன்னபூரணிக்கு ஒரு வித வருத்தம் மனதில் இருந்து கொண்டே இருந்தது. ஜனவரி 1 எண்ட்ரி கேன்சல் ஆனதை அவரால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. மனதில் ஓரத்தில் அது ஒரு குறையாகவே இருந்தது. குழந்தைகளும் அதை விரும்பிக் கொண்டிருந்தார்களாம். செங்கல்பட்டு இனி வேலைக்கு ஆகாது... முதல் சரியில்லாமல் போனதால், முடிவை வளமாக மாற்ற புதிய ரூட்டை திறந்துள்ளார், அன்னபூரணி அரசு அம்மா. 



ஆமாம்... இந்த முறை ‛அம்மா எனர்ஜி தர்ஷன்’ என்கிற பெயரில், ஏப்ரல் 3 ம் தேதி மிகப்பெரிய அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் அன்னபூரணி அரசு அம்மா. இந்த முறை டிமாண்ட் கடுமையாக இருப்பதால், நபர் ஒருவருக்கு ரூ.700 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை ஆன்லைனில் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ள பிரத்யேக இணையமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 




சென்னை சுதானந்தஆசிரமத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த அருள் பாலிக்கும் வைபவத்தை இயற்கை ஒளி பவுன்டேசன் ஏற்பாடு செய்து வருகிறது. ஏப்ரல் 1 ம் தேதியோடு முன்பதிவு செய்ய முடியாது. ஒருமுறை செலுத்திய கட்டணம், எக்காரணம் கொண்டும் திரும்ப தரப்படமாட்டாது என்கிற பல்வேறு நிபந்தனைகளுடன் ‛அம்மா எனர்ஜி தர்ஷன்’ கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த முறை, அம்மாவின் வைபிரேஷன் ஆசியை பெறும் நிகழ்வு, ஒரே செலிபிரேஷனாக இருக்கும் என்பதால், அதை காண பக்த குழந்தைகளும் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.