உள்ளாட்சி தேர்தலில் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதே அரிதானது. காரணம், எக்கச்சக்கமாக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். இதில் பிரபலங்கள் போட்டியிடுவது கூட நமக்கு தெரியாமல் போய்விடும். அப்படி ஒரு வேட்பாளர் தான், சென்னை மாநகராட்சி 72 வது வார்டு சுயே., வேட்பாளராக களமிறங்கியுள்ள கானா பாலா. 




பாலமுருகன் என்ற பெயரோடு வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள கானா பாலா, வடசென்னை திருவிக நகர் புளியந்தோப்பு என்கிற பகுதியில் தான் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எல்லாம் தங்களின் வேட்பாளர்களை அங்கு களமிறக்கியுள்ளன. அவர்களை எதிர்த்து களம் காண்கிறார் கானா பாலா.


வேட்பு மனுத்தாக்கலை நிறைவு செய்த அவர், தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பொதுவாக வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது, அதில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்களின் விபரங்கள், சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வகையில், பாலாவின் சொத்து விபரங்கள் உள்ளிட்டவை, அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


51 வயதான கானா பாலா, அதே வார்டில் வெங்கடேசபுரம் புதிய காலனி 3வது தெரு, கன்னிகாபுரம் சென்னை என்கிற முகவரியில் வசித்து வருகிறார். பா.திருமலை என்பவர், அவரை முன்மொழிந்துள்ளார். 1998 ல் மதுரை சட்டக்கல்லூரியில் பிஎல் முடித்திருக்கிறார் கானா பாலா. மனைவி பெயர் நதியா, மகள் அபிமன்யா, மகன் அபிமன்யூ. கானா பாலா மீது எந்த வழக்கும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 




கானா பாலாவிற்கு ரூ.16 லட்சத்து 81 ஆயிரத்து 307 மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், அசையா சொத்தாக சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தின் மதிப்பாக ரூ.39 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள சொத்து என மொத்தம் 56 லட்சத்து 1307 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கானா பாலா பெயரில் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. அதே போல அவரது மனைவி பெயரில் ரூ.6 லட்சத்து 16 ஆயிரத்து 800 மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அவர்களை சார்ந்தவர்கள் வழியில் தலா ரூ.4400 ரூபாய் என இருவரிடம் இருப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதே பகுதியில் கடந்த இருமுறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட கானா பாலா, தோல்வி அடைந்திருக்கிறார். அதே நேரத்தில், இரண்டு தேர்தல்களிலும் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். இம்முறை இன்னும் முழு வீச்சில் களமிறங்கியிருக்கும் கானா பாலா, வெற்றி கனியை பறிப்பார் என்கிற பயம், சக வேட்பாளர்களிடம் நிலவி வருவதால், பிரச்சாரத்தை அனைவரும் தீவிரப்படுத்தியுள்ளனர். பார்க்கலாம்... கானா பாலா... கவுன்சிலர் பாலாவாக மாறுகிறாரா என்று!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண